குஜராத் மாநிலம் ஜூனாகாத் மாவட்டத்தில் உள்ள ஷோபாவத்தல கிராமத்தில் விபாபென் என்ற பெண், தனது கணவரை கொரோனா பெருந்தொற்று காலத்தில் இழந்த பிறகு, 22 வயதான ஷிவம்கிரி மற்றும் 15 வயதான மற்றொரு மகனுடன் வசித்து வந்தார். ஷிவம்கிரி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய, அவரது தம்பி எலெக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. எனினும், இளைய மகனுக்கு இருந்த குடிப்பழக்கம் காரணமாக வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்தச் சூழலில், ஷிவம்கிரிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது காஞ்சனா குமாரி என்ற பெண்ணுடன் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. காஞ்சனா குமாரி 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 16ஆம் தேதி, வழக்கம் போல் குடித்துவிட்டு வந்த இளைய மகன், வீட்டில் தகராறு செய்துள்ளார்.
இதனால் கோபமடைந்த ஷிவம்கிரி, தனது தம்பியை கடுமையாகக் கண்டித்துத் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த 15 வயதுடைய சிறுவன், வீட்டில் இருந்த இரும்புக் கம்பியை எடுத்து அண்ணன் ஷிவம்கிரியை சரமாரியாக தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அண்ணனை கொலை செய்த பிறகு, இந்தச் சம்பவம் கர்ப்பிணியான அண்ணி காஞ்சனா குமாரி மூலம் வெளியே தெரிந்துவிடுமோ என்ற அச்சத்தில், அந்தச் சிறுவன் மேலும் ஒரு கொடூரச் செயலை அரங்கேற்றியுள்ளான். அவர், அண்ணி காஞ்சனாவை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவரது வயிற்றில் மிதித்துக் கொலை செய்திருக்கிறார்.
இந்தக் கொடூரக் கொலைகளை அடுத்து, இரு சடலங்களையும் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்துள்ளார். மேலும், கொலைக்கான ஆதாரங்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி அழித்திருக்கிறார். இந்தச் சம்பவத்துக்கு அவரது தாயார் விபாபென்னும் உடந்தையாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவம் நடந்து 16 நாட்கள் கழிந்த நிலையில், தீபாவளி பண்டிகையன்று காஞ்சனாவின் பெற்றோர் தங்கள் மகள் மற்றும் மருமகனை தொடர்புகொள்ள முயற்சித்துள்ளனர். ஆனால், இருவரும் தொடர்புக்குக் கிடைக்காததால், 15 வயது சிறுவனிடம் விசாரித்துள்ளனர். அப்போது சிறுவன் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, இருவரும் சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறான்.
இதனால் சந்தேகம் அடைந்த காஞ்சனாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், 15 வயது சிறுவன் தான் அண்ணன் மற்றும் கர்ப்பிணி அண்ணியைக் கொன்று வீட்டிற்குள் புதைத்து, விபத்து நாடகம் ஆடியது அம்பலமானது. இதனையடுத்து, சிறுவன் மற்றும் அவரது தாயார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.



