டிஜிட்டல் யுகத்தில் அலுவலகப் பணிக்காக ஒரு நாளைக்கு 9 முதல் 12 மணி நேரம் வரை ஊழியர்கள் அமர்ந்திருப்பது வழக்கம் ஆகிவிட்டது. இத்தகைய உட்கார்ந்த வாழ்க்கை முறை, கடுமையான உடல்நலக் கேடுகளை ஏற்படுத்தும் என்று அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமார், எம்.டி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டாக்டர் சுதிர் குமார் தனது எக்ஸ் தளத்தில், ”தொடர்ந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, உடல் பருமன், டைப் 2 நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் அகால மரணம் போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளார். வேலை நேரத்தில் செயலற்ற நிலையில் இருப்பது, தசைகளில் இறுக்கத்தையும் (தசை விறைப்பு), உடலின் வளர்சிதை மாற்றத்தில் மந்த நிலையையும் ஏற்படுத்துகிறது.
காலப்போக்கில், இவை நாள்பட்ட நோய்களின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கின்றன. இந்த ஆபத்தை மக்கள் அறிந்திருந்தாலும், அதைக் குறைத்து மதிப்பிட்டு, அதைத் தடுக்கக் குறைவான முயற்சிகளையே மேற்கொள்வதாகவும் டாக்டர் குமார் கவலை தெரிவித்தார். இந்த எதிர்மறை விளைவுகளைக் குறைப்பதற்கான எளிய தீர்வையும் டாக்டர் சுதிர் குமார் பரிந்துரைத்துள்ளார்.
அதன்படி, ஊழியர்கள் ஒவ்வொரு 20 முதல் 30 நிமிடங்களுக்கும், சுமார் 2 முதல் 5 நிமிடங்கள் எழுந்து நடக்க வேண்டும். இதனால் உடலின் ரத்த ஓட்டம் மற்றும் வளர்சிதை மாற்றம் மீண்டும் தூண்டப்பட்டு, மேலே குறிப்பிட்ட கடுமையான நோய்கள் உருவாகும் அபாயம் குறையும் என்றும் அவர் விளக்கினார். 8 மணி நேர வேலை நாளில் இந்தச் சிறிய இடைவெளிகளைச் சரியாக ஒருங்கிணைத்தால், மொத்த சுறுசுறுப்பான நேரம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை அதிகரிக்கும். இது உடலில் டிரைகிளிசரைடு அளவைக் குறைக்க, ரத்த சர்க்கரைக் கட்டுப்பாட்டை மேம்படுத்த மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
பல மருத்துவ ஆய்வுகள், இந்த வழக்கமான குறுகிய இயக்க இடைவெளிகள், நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் ஏற்படும் மரண அபாயத்தை வெகுவாகக் குறைக்கும் என உறுதிப்படுத்தியுள்ளன. உட்கார்ந்திருப்பதை நிறுத்துவது, இன்சுலின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவுகிறது. நீர் பாட்டிலை நிரப்பச் செல்வது, தொலைபேசியில் பேசும்போது நின்றுகொண்டே பேசுவது அல்லது மேசைக்கு அருகிலேயே உடலை லேசாக நீட்டி பயிற்சி செய்வது போன்ற சிறிய செயல்கள் கூடப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
தனிநபர்கள் இது போன்ற அசைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் டாக்டர் குமார் வலியுறுத்தினார். ஒருமுறை செய்யும் கடுமையான உடற்பயிற்சிகளை விட, வழக்கமான குறுகிய இடைவெளிகள் உடலுக்கு அதிக நன்மை தரும். எனவே, நிலையான முயற்சி முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு 20-30 நிமிடங்களுக்கும் ஒரு இடைவேளை எடுத்து 2 முதல் 5 நிமிட நடைபயிற்சியை மேற்கொள்வது பல கடுமையான நோய்கள் மற்றும் அகால மரண அபாயத்தை குறைக்கும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Read More : “திமுக கூட்டணி வேண்டாம்”..!! விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேச்சு..!!



