2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
தேர்தலை முதன்முறையாக சந்திக்கும் தவெகவும் பல்வேறு ஊகங்களை வகுத்து வருகிறது.. கட்சியின் முதல் பொதுக்கூட்டத்திலேயே, ஆட்சியில் பங்கு என்று மிகப்பெரிய அஸ்திரத்தை விஜய் வீசிய போதிலும் தவெக உடனும் இன்னும் எந்த கட்சியும் கூட்டணி அமைக்க முன்வரவில்லை..
தவெகவை பயன்படுத்தி சீட் பேரத்தை அதிகப்படுத்திய காங்கிரஸ், திமுக உடன் கூட்டணியை இறுதி செய்துவிட்டது.. இந்த சூழலில் என்.டி.ஏ கூட்டணியில் தவெகவை இழுக்க பாஜக தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.. முதலில் 45 தொகுதிகள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது 51 சீட் வரை ஒதுக்க பாஜக முன் வந்துள்ளது.. மேலும் விஜய்க்கு துணை முதல்வர் பதவியை கொடுக்க பாஜக முன்வந்துள்ளது.. ஆனால் இபிஎஸ் தரப்போ தவெக கூட்டணிக்கு வந்தால் 20 – 30 தொகுதிகள் வரை ஒதுக்க தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது..
ஆனால், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ வழக்கு, ‘ஜன நாயகன்’ திரைப்படம் முடங்கியது மற்றும் நிலுவையில் உள்ள விவாகரத்து வழக்கு போன்ற காரணங்களால் நடிகர் விஜய் கடும் நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்.டி.ஏ கூட்டணிக்குள் விஜய்யை எப்படியாவது இழுக்க வேண்டும் என்பதற்காக மட்டும் இந்த நெருக்கடிகள் கொடுக்கப்படவில்லையாம்..
மாறாக 2021-ஆம் ஆண்டில் சசிகலா செய்தது போலவே, வரவிருக்கும் தேர்தலில் விஜய்யை அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்கச் செய்வதற்காகவே உருவாக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது விஜய் அரசியலிலிருந்து ஒதுங்கி நிற்க வாய்ப்பில்லை; ஏனெனில், தனது கட்சியைத் தொடங்கியதிலிருந்து அவர் அரசியல் பாதையில் வெகுதூரம் பயணித்துவிட்டார்.
எனினும், 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் தேர்தல் வேட்புமனு விவகாரத்தில் நிகழ்ந்ததை போன்றதொரு உத்தியை விஜய் தற்போது பரிசீலித்து வருவதாக தவெகவின் முக்கியப் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர்.
அதாவது, 2001-இல் ஜெயலலிதா நான்கு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்; ஆனால் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டிருந்த காரணத்தினால், அவரது வேட்புமனுக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. பின்னர், சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தனர். அதன்பின்னர், அந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்; ஆண்டிப்பட்டி தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதலமைச்சராகப் பதவியேற்றார்.
சென்னை அண்ணா நகரின் ஆடம்பரமான பகுதியில் அமைந்துள்ள தனது முக்கியச் சொத்துக்களில் ஒன்றை, விஜய் ஒரு வாரத்திற்கு முன்பு சுமார் 35 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.. அந்தச் சொத்து விற்பனை குறித்த பேச்சுவார்த்தைகள் ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்தாலும் கூட, தற்போது அது அவசர அடிப்படையில் இறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், தனது மற்ற இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களையும் பணமாக மாற்ற (விற்பனை செய்ய) விஜய் முயற்சி செய்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சொத்து விற்பனையானது, தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு நிதியளிப்பதற்காக இல்லையாம்.. மாறாக, வேறு சில முக்கியக் காரணங்களுக்காகவே மேற்கொள்ளப்படுகிறது. அந்த காரணங்களில் ஒன்று தான்.. நிலுவையில் உள்ள அவரது விவாகரத்து வழக்குதான் என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
விவாகரத்து வழக்கு முடிவடைவதற்கு நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டுவிட்டால், அந்தச் சொத்துக்களின் மீது தனது மனைவிக்கு உரிமை கோர இயலாமல் போகலாம்.
இரண்டாவது காரணம் அரசியல் ரீதியானது.. அதாவது, தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது சமர்ப்பிக்கப்படும் சொத்து விவரப் பட்டியலில் (Affidavit) ‘சொத்துக்கள்’ என்ற தலைப்பின் கீழ் இவை இடம்பெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே சொத்துக்கள் விற்கப்படுகின்றன. மேலும், தற்போதைய சூழலில், தேர்தல் வேட்புமனுவில் தனது மனைவியின் பெயரில் உள்ள சொத்துக்களைக் குறிப்பிடுவதற்கு, விஜய்யால் தனது மனைவியின் சம்மதத்தைப் பெற இயலாமல் போகலாம். இந்த காரணங்களால் தனது வேட்புமனு நிராகரிக்கப்படக்கூடும் என்று விஜய் நினைக்கிறாராம்..
ஒருவேளை அவ்வாறு தனது மனு நிராகரிக்கப்பட்டால் 2001-இல் ஜெயலலிதா செய்தது போலவே தானும் ‘பாதிக்கப்பட்டவர்’ (Victim) என்ற அனுதாபத்தைப் பெற முடியும் என்றும் விஜய்யின் சட்டக் குழு அவருக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..!



