நைஜீரியாவின் மத்திய மாகாணமான நைஜர் மாநிலத்தில் எரிபொருள் டேங்கர் லாரி வெடித்த சம்பவத்தில் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 52 பேர் காயமடைந்துள்ளனர். பெட்ரோல் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரி, சாலையின் மோசமான நிலை காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து, பிடா-அகை சாலையில் உள்ள எஸ்ஸான் மற்றும் படெகி கிராமங்களுக்கு அருகே கவிழ்ந்தது.
அப்போது, டேங்கர் லாரியில் இருந்து பெட்ரோல் சிந்தியதைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள், ஆபத்தை உணராமல் திரண்டு வந்து, கசிந்த எரிபொருளைச் சேகரிக்க முற்பட்டனர். அந்த சமயத்தில், எதிர்பாராதவிதமாக டேங்கர் லாரி திடீரென பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் சிக்கி அங்கிருந்த மக்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.
தீ விபத்து காரணமாகப் பலியானவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துவிட்டன என்றும், காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் நைஜர் மாநில அவசரகால சேவைப் பிரிவின் தலைவர் அப்துல்லாஹி பாபா அரா தெரிவித்துள்ளார்.
ஆபத்து குறித்த தொடர் எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், கவிழ்ந்த வாகனங்களில் இருந்து எரிபொருளைச் சேகரிக்க மக்கள் முயல்வதால் நைஜீரியாவில் இதுபோன்ற டேங்கர் வெடிப்பு விபத்துகள் தொடர்ந்து நடப்பது ஒரு தொடர் துயரமாக உள்ளது. நைஜர் மாநில ஆளுநர் முகமது உமரு பாகோ இந்தச் சம்பவம் குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்ததுடன், இதுபோன்ற விபத்துகள் குறித்துத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டும், மக்கள் இவ்வாறு செய்வது வருத்தமடையச் செய்வதாக அவர் கூறியுள்ளார்.
Read More : தலை தீபாவளி முடிந்து உடனே வேலைக்கு போக துடித்த கணவன்..!! தூக்கில் தொங்கிய மனைவி..!! சிவகங்கையில் சோகம்..!!



