கர்நாடக மாநிலம் தார்வாட் மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் விவேகானந்தன். இதே கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் மான்யா பாட்டீல்.. இவரும் தனியார் காலேஜில் ஒன்றாக படித்து வந்தனர். இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் செல்போனில் பேசியில் வெளி இடங்களுக்கு ஒன்றாக சென்று வந்தும் இருந்துள்ளனர். ஒரு கட்டத்தில் மான்யா வீட்டில், இந்த காதல் விவகாரம் தெரிந்துவிட்டது,
விவேகானந்தன் மாற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர், இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். இதை அறிந்த விவேகானந்தன், தன்னால் காதலிக்கு தொந்தரவு வரக்கூடாது என்று சொல்லி, அவரிடமிருந்து விலகி செல்ல முற்பட்டுள்ளார். ஆனால் யாருக்காகவும் தன்னுடைய காதலை இழக்க முடியாது என்றும், தன்னை திருமணம் செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் திட்டவட்டமாக மான்யா சொல்லிவிட்டார்.
இதையடுத்து, காதலர்கள் இருவருமே பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர். மான்யா 20 வயது பெண் என்பதால், போலீசார் பெண் வீட்டாரை சமாதானம் செய்து வைத்துள்ளனர். தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அறிந்த காதல் ஜோடி, ஊரை விட்டு வெளியேறி 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காவேரி மாவட்டத்தில் தஞ்சமடைந்தனர்.
மான்யா 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில் இனிமேல் தங்களது குடும்பத்தினரால் எந்த பிரச்சினையும் ஏற்படாது என்று நினைத்துள்ளார். இதையடுத்து, தம்பதி இருவரும் கடந்த 8ம் தேதி, சொந்த ஊரான இனாம் வீராபூர் கிராமத்திற்கு திரும்பியுள்ளனர். ஆனால், மகளை பார்த்த பெற்றோருக்கு இன்னும் கோபம் அடங்கவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை மான்யாவின் அப்பா உறவினர்களுடன் விவேகானந்தனின் வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்தார்.
அப்போது, வீட்டில் மான்யா, அவரது மாமனார், மாமியார் என 3 பேர் மட்டுமே இருந்துள்ளனர். இரும்பு பைப், மண்வெட்டியுடன் வீட்டிற்குள் புகுந்த கும்பல், வயதானவர்கள் என்றும் பார்க்காமல் அவர்களை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மான்யா, தடுக்க ஓடிவந்தார். அப்போது மான்யாவின் அப்பா, கர்ப்பிணி என்றும் பார்க்காமல் அவரை இரும்பு பைப்பால் தலையில் பலமாக அடித்துவிட்டு அங்கிருந்து கும்பல் தப்பி சென்றுவிட்டனர்.
இவர்களின் அலறலை கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்கு போராடிய கர்ப்பிணி உட்பட 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதில், 7 மாத கர்ப்பிணி மான்யா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மான்யாவின் மாமனார், மாமியாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணின் அப்பா உட்பட 3 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more: மாதம் ரூ. 5500 பென்ஷன்.. ஓய்வுக்கு பிறகு கவலையே இல்ல.. இந்த திட்டம் உதவும்..!



