நாட்டில் மாணவிகள், சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் 1090 என்ற உதவி எண்ணிற்கு நள்ளிரவு நேரத்தில் ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய சிறுமிகள், தங்களின் வளர்ப்பு தந்தை எங்களுக்கு பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக புகாரளித்தனர்.
இதையடுத்து, போலீசார், உடனடியாக சிறுமிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று நேரில் விசாரணை நடத்தினர். அங்கு நடைபெற்று வந்த கொடுமைகளை சிறுமிகள் விவரித்தனர். விசாரணையின் போது வெளிவந்த விவரங்கள், வழக்கமான பாலியல் குற்றங்களை விட, கொடுமையாக இருந்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகளின் இயல்பான குடும்ப சூழ்நிலை ஏற்கனவே சிக்கலானதாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு, இவர்களது தந்தை, மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார். அந்த வழக்கில் சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டும், தேவையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் முக்கிய சந்தேக நபர் ஒருவர் விடுவிக்கப்பட்டார். காலப்போக்கில், அந்த விடுவிக்கப்பட்ட நபரையே, குழந்தைகளின் தாயார் திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில், தாய் வீட்டில் இல்லாத நேரங்களில் வளர்ப்பு தந்தையின் தவறான நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. அதனைச் சிறுமிகள் தங்கள் தாயிடம் கூறிய போதும், அவர் நடவடிக்கை எடுக்காமல், அவர்களை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். தனிமை, பயம், மற்றும் பாதுகாப்பற்ற நிலைமையால் பாதிக்கப்பட்ட அந்த சிறுமிகள், 1090 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தங்களுக்கு நடந்த கொடுமைகளை புகாரளித்தனர். இதையடுத்து, வளர்ப்பு தந்தையையும், சிறுமிகளின் தாயையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.