தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது. குறிப்பாக, தினமும் நம் பயன்படுத்தும் ஃபிரிட்ஜ் (refrigerator) போன்ற சாதனங்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாட்டர் லெவல் அதிகரிப்பு, ஈரப்பதம் மற்றும் மின்தடை போன்றவை ஃபிரிட்ஜின் செயல்திறனை பாதிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மழையின்போது அதிக ஈரப்பதம் ஏற்பட்டால், ஃபிரிட்ஜின் பின்புறம் உள்ள கம்பிகள் மற்றும் கம்பி இணைப்புகள் ஈரமாகிவிடும். இதனால், மின்கசிவு, சார்ட் சர்க்யூட் போன்ற பிரச்சனைகள் வரும். எனவே, ஃபிரிட்ஜை சுவருடன் சேர்ந்து ஒட்டவைக்காமல், இடைவெளி விட்டு வைத்திருக்க வேண்டும். அதேசமயம், பிரிட்ஜின் பின்புறம் சுத்தமாகவும், வறண்டதாகவும் வைத்திருக்க வேண்டும்.
அதேபோல், மழைக்காலங்களில் மற்றொரு முக்கிய பிரச்சனை இருக்கிறது. அதாவது, குளிர்சாதனப்பெட்டிக்குள் ஈரப்பதம் அதிகமாகிவிடும். இதனால், உணவுப் பொருட்கள் சீக்கிரமாக கெட்டுப்போகும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் அதிகம் உருவாக வாய்ப்புள்ளது. கெட்ட வாசனை உருவாகும்.
இவற்றைத் தவிர்க்க, ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பை எடுத்து குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்தாலே போதும். ஏனெனில், உப்பில் ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை உண்டு. பாக்டீரியா வளர்ச்சி குறையும். கெட்ட வாசனை வராது. பூஞ்சைகள் உருவாவது தடுக்கப்படும். காய்கறிகள் மற்றும் பழங்கள் நீண்ட நாட்களுக்கு கெட்டுப் போகாமல் இருக்கும்.
அதேபோல், இந்த உப்பை 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி வைக்கலாம். உப்பு ஈரமாகவோ, திடமாகவோ மாறியிருந்தால், அதை மாற்றி புதிதாக வைக்க வேண்டும். மேலும் வாசனைக்கு விருப்பமிருந்தால் கிராம்பு அல்லது காஃபி கொட்டைகளை சேர்த்துக் கொள்ளலாம். இது குளிர்சாதன பெட்டிக்குள் ஒரு நல்ல வாசனையை ஏற்படுத்தும்.
மழைக்காலத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் முன்னெச்சரிக்கைகளில் இது மிகவும் எளியதும், பயனுள்ளதும் ஆகும். உடல்நல கவனிப்போடு, வீட்டு சாதனங்களுக்கும் பாதுகாப்பு தரும் இத்தகைய வழிகளை பின்பற்றுங்கள்.