சென்னையைச் சேர்ந்த 24 வயது பயிற்சி மருத்துவர் ஒருவர், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு, செல்போன் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர், இந்த மருத்துவரை ஓரினச்சேர்க்கைக்கு அழைத்துள்ளார். இதனை நம்பிய மருத்துவர், கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று நள்ளிரவில் நெல்லை – தூத்துக்குடி சாலையில் உள்ள காட்டுப் பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
இதையடுத்து அங்கு வந்த நபர், மருத்துவரிடம் பேச்சுக் கொடுத்து, அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் அழைத்துச் சென்றுள்ளார். அங்கே ஏற்கனவே பதுங்கியிருந்த 5 பேர் கொண்ட கும்பல், மருத்துவரைக் கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். வலியால் துடித்த மருத்துவரிடம் இருந்து, செல்போனைப் பறித்து, அவரது வங்கிக் கணக்கில் இருந்த 21 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் தங்கள் கணக்கிற்கு மாற்றிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மருத்துவர், எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் தானே சிகிச்சை எடுத்துக்கொண்டார். பின்னர், இந்தச் சம்பவம் குறித்து பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்த போலீஸார், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். நெல்லையில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : இந்த பழக்கத்தால் கூட மாரடைப்பு வருமா..? இதயநோய் நிபுணர் சொல்லும் அதிர்ச்சி காரணங்கள்..!!