தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த மகாலட்சுமி (30) என்பவருக்கும், பர்கூர் அருகே உள்ள கோதியழகனூரைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவருக்கும் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான சில வருடங்களிலேயே இவர்களுக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடுகளும், சண்டைகளும் ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
சண்டைகள் தீவிரமானதால், மகாலட்சுமி 4 மாதங்களுக்கு முன்பு கணவர் வீட்டை விட்டு வெளியேறி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார். மகாலட்சுமியை சமாதானப்படுத்த வெங்கடேசன் பலமுறை முயன்றபோதும், அவர் திரும்பி வர மறுத்துள்ளார். இருப்பினும், தொடர்ந்து அவர் மகாலட்சுமியை சந்தித்து மன்னிப்புக் கோரியதோடு, மகாலட்சுமியின் தாயிடமும் இனிமேல் சண்டையிட மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார்.
சமாதான முயற்சிக்குப் பிறகு, மகாலட்சுமி, வெங்கடேசன் மற்றும் குழந்தைகள், மாமியார் ஆகியோர் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துவிட்டு, சமீபத்தில் தருமபுரிக்கு திரும்பினர்.
வீட்டிற்கு வந்த சிறிது நேரத்திலேயே தம்பதியினர் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த மகாலட்சுமியின் பாட்டி அவர்களை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால், சண்டை தீவிரமானது. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன், மனைவி சத்தம் போடுவதை தடுக்க, முதலில் அவரது வாயில் துணியை திணித்ததாகத் தெரிகிறது. பின்னர், கத்தியை எடுத்து மகாலட்சுமியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார். அந்தக் கோபத்துடன் நிற்காமல், அவர் மனைவியின் கை மற்றும் கால்களையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.
இதையடுத்து, அங்கிருந்த பாட்டி பயத்தில் அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, மகாலட்சுமி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். உடனடியாக, வெங்கடேசன் தனது இரண்டு குழந்தைகளுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து அரூர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குழந்தைகளுடன் தப்பி ஓடிய வெங்கடேசனை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், சில மணி நேரத்திலேயே வெங்கடேசனை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். குழந்தைகளும் மீட்கப்பட்டு, தற்போது வெங்கடேசனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.



