இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்..
நல்லகண்ணு மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.. அந்த வகையில் நல்லகண்ணு மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், அவரின் உடலுக்கு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். அதே போல் கட்சி பாகுபாடின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
அந்த வகையில் தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் அய்யா இரா.நல்லகண்ணு அவர்கள் காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன். அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த தோழர், அய்யா இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ மாறாத கொள்கைப் பிடிப்புடன் வாழ்ந்து மறைந்த தோழர் திரு. நல்லகண்ணு அவர்களின் இழப்பு தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாதது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும். ஆழ்ந்த அனுதாபங்கள்.” என்று தெரிவித்துள்ளார்..
Read More : தகைசால் தமிழர் நல்லகண்ணு மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு..! அரசியல் தலைவர்கள் இரங்கல்..!



