சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் (29) தனது மனைவி, அவரது தோழி மற்றும் திருநங்கை ஒருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தார். வின்ஸ்டன் பிரபு, அரவிந்தனின் மனைவியின் தோழியுடன் பேசத் தொடங்கினார். போதையில் பேச்சு வளர்ந்த நிலையில், வின்ஸ்டன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் அந்தப் பெண்ணை ஹோட்டலின் 5-வது மாடியில் உள்ள அறைக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு அந்தப் பெண் மறுக்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியது.
உடனடியாக, அந்தப் பெண் தனது நண்பர்களான வழக்கறிஞர்கள் விஷால் கணேஷ் (26), முத்துக்கிருஷ்ணன் (25) ஆகியோரை வரவழைத்தார். அவர்கள் வந்து வின்ஸ்டன் பிரபு குழுவிடம் தகராறு செய்தனர். இதனால் இரண்டு குழுக்களுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் பாட்டில்களால் ஒருவரை ஒருவர் தாக்கி மோதிக்கொண்டனர். இந்த மோதலில் வின்ஸ்டன் பிரபுவுக்கு நெற்றியிலும், அரவிந்தனுக்கு கழுத்து மற்றும் தலையிலும் இரத்தக் காயங்கள் ஏற்பட்டன.
இதையடுத்து, ஓட்டல் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், நுங்கம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து வின்ஸ்டன் பிரபு, திவாகர் அரவிந்த், பிரனே, ஜெயபிரகாஷ், பாஸ்கர், அரவிந்தன், விஷால் கணேஷ், முத்துக்கிருஷ்ணன் ஆகிய எட்டு பேரையும் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read More : இப்படியே போச்சுனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்..!! இத்தனை குடும்பங்கள் அடிமையா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!



