கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் வைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கங்கொண்டனஹள்ளி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்த 27 வயதான அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள், நேற்று முன்தினம் இரவு 5 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்துள்ளது. அந்தக் கும்பல், இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அவரை மிரட்டி வீட்டில் இருந்த சுமார் ரூ.25,000 ரொக்கம் மற்றும் இரண்டு செல்போன்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட இளம்பெண் உடனடியாக காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இளம்பெண்ணை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
இதன் விளைவாக, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மீதமுள்ள இரண்டு குற்றவாளிகளையும் பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இளம்பெண்ணுக்கு முன்பே அறிமுகமானவர்களா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.



