பெங்களூரில் உள்ள ஒரு திரையரங்கின் பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மடிவாளா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சந்தியா திரையரங்கில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட ‘நுவ்வு நாக்கு நச்சாவ்’ என்ற தெலுங்குப் படம் திரையிடப்பட்டபோது, திரைப்படம் பார்க்க வந்தவர்கள் கழிவறையைப் பயன்படுத்தச் சென்றபோது இந்தக் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது.
இதைக் கண்டறிந்ததும், உள்ளூர் மக்கள் உடனடியாக கேமராவை வைத்ததாக சந்தேகிக்கப்பட்ட இளைஞரைப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். காவல்துறை சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே, அந்த இளைஞர் பொதுமக்களால் தாக்கப்பட்டார்.
இதையடுத்து, காவல்துறையினர் அந்த இளைஞரைக் கைது செய்து, அதன் நோக்கம் குறித்தும், ஏதேனும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டதா அல்லது பரப்பப்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்கள் கழிவறையில் கேமரா வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..



