கருவளம் தொடர்பான சிக்கல்கள் என்றாலே அது பெண்களுக்கு மட்டுமே உரியது என்ற அறியாமை நிறைந்த காலம் மெல்ல மறைந்து வருகிறது. இன்றைய நவீன உலகில், ஆண்களும் சம அளவில் இத்தகைய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை மருத்துவ உலகம் உரக்கச் சொல்கிறது. குறிப்பாக, விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கை குறைபாடு என்பது இன்றைய காலக்கட்டத்தில் ஆண்களிடையே பெரும் கவலையாக உருவெடுத்துள்ளது. இதற்குத் தீர்வு காண விலையுயர்ந்த சிகிச்சைகளை நாடும் முன், நம் சமையலறையிலேயே ஒரு அற்புதமான மருந்து ஒளிந்திருக்கிறது என்கிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா ஷா. அதுதான் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ‘பூண்டு’.
பரபரப்பான வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், உடல் பருமன் மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஆண்களின் இனப்பெருக்க மண்டலத்தை வெகுவாகப் பாதிக்கின்றன. இதற்குத் தீர்வாக, பூண்டு பற்களைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இரண்டு ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் வரும் வரை வறுத்து, அதனைப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்தப் பொடியைக் காலை மற்றும் மாலை என இருவேளைகளும் தொடர்ந்து 15 நாட்கள் உட்கொண்டு வந்தால், விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் தரம் வியக்கத்தக்க வகையில் மேம்படும். பூண்டில் உள்ள ‘அல்லிசின்’ (Allicin) மற்றும் ‘செலீனியம்’ ஆகிய மூலக்கூறுகள் தரமான உயிரணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இது ஆண்களுக்கு மட்டுமின்றி, தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க விரும்பு பெண்களுக்கும் ஒரு சிறந்த தீர்வாகும்.
உணவுமுறை மாற்றங்கள் மட்டுமே முழுமையான பலனைத் தந்துவிடாது என்பதால், சில வாழ்வியல் ஒழுக்கங்களையும் கடைபிடிப்பது அவசியம் என்கின்றனர் வல்லுநர்கள். துரித உணவுகள் மற்றும் குளிர்பானங்களைத் தவிர்த்துவிட்டு, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் நடைப்பயிற்சி, நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளும், சீரான தூக்கமும் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். மிக முக்கியமாக, அதிக வெப்பமான நீரில் குளிப்பதையும், மிக இறுக்கமான உள்ளாடைகள் அணிவதையும் தவிர்ப்பது விந்தணுக்களின் உயிர்ச்சக்தியை பாதுகாக்க உதவும் எளிமையான அதேசமயம் வலிமையான வழிமுறைகளாகும்.



