தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்குவது, பேருந்துகளில் இலவசப் பயணம் (இதன் மூலம் மாதத்திற்கு மேலும் ரூ.1,000 வரை சேமிக்க முடிகிறது) மற்றும் திருமண உதவித் திட்டங்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
மின்சார ஆட்டோ வாங்க கடன் உதவி :
இப்போது, பெண்கள் சுயதொழில் தொடங்கிப் பொருளாதார ரீதியாக வலுப்பெறுவதற்காக ஒரு முக்கியத் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதாவது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவைச் சேர்ந்த பெண்கள் மின்சார ஆட்டோ வாங்குவதற்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவியை அரசு வழங்குகிறது. இந்தக் கடனானது 9 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.
தகுதி வரம்பு மற்றும் விண்ணப்பிக்கும் விவரங்கள் :
இந்த மின்சார ஆட்டோ கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்ட தமிழகத்தைச் சேர்ந்தப் பெண்களாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, இருப்பிடச் சான்று, வருமானச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வாக்காளர் அடையாள அட்டை போன்ற அத்தியாவசிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த திட்டம் தொடங்கி 5 மாதங்களிலேயே சுமார் 550 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 75 பேருக்குக் கடனுதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு விரைவில் கடனை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், நடப்பு ஆண்டில் 1,000 பெண்களுக்கு மின்சார ஆட்டோ வாங்க ரூ.3 லட்சம் வரை கடன் வழங்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் குறித்து முழுமையான விவரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும், விருப்பம் உள்ள பெண்கள் அருகில் உள்ள கூட்டுறவு வங்கிகளை அணுகி அங்குள்ள அதிகாரிகளிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More : முருகப்பெருமானுக்குரிய சக்தி வாய்ந்த மந்திரங்கள்..!! நெய் விளக்கு ஏற்றி இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!



