தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களம் புதிய திருப்பங்களை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தல் களத்தைச் சந்திக்கத் தயாராகி வருவதால், எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.
இந்நிலையில், தவெக-வின் உயர்மட்ட நிர்வாகக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அதிமுக உட்கட்சிப் பூசல் மற்றும் தவெக-வின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்துப் பல தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக-வில் தங்களை இணைத்துக் கொள்ளும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்று ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவு மாவட்ட செயலாளர்கள் உறுதியாக இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும், “வருகிற பொங்கல் பண்டிகைக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை மக்கள் காண்பார்கள். அதிமுக-வில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளனர். அதேபோல், அமமுக தரப்பிலிருந்தும் எங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.
விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அரசியல் பயணம் குறித்து பேசிய அவர், வரும் டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மலேசியாவில் நடைபெறும் தனது திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தார். அந்த நிகழ்விற்குப் பிறகு, அவர் தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றார்.
மேலும், 2026-ஆம் ஆண்டில் விஜய் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்த செங்கோட்டையன், “அரசியலில் கூட்டம் கூட்டுவதற்குப் பலரும் பெரும் செலவு செய்து வரும் நிலையில், விஜய்க்கு மட்டும் எவ்வித செலவுமின்றி மக்கள் தானாக முன்வந்து கூடுகிறார்கள். எதிர்கால தமிழகத்தை ஆளும் தகுதி அவருக்கு இருப்பதாக மக்கள் நம்புகிறார்கள்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
Read More : கிறிஸ்துமஸ் பண்டிகையின் முக்கியத்துவமும் சிறப்பும் தெரியுமா? இது ஏன் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது?



