2025-ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வரப்போகிறது. இந்த ஆண்டின் வலிகளை மறந்து, புதிய நம்பிக்கைகளுடன் 2026-ஆம் ஆண்டை வரவேற்க அனைவரையும் தயாராகி வருகிறோம். சூரியனின் ஆதிக்கத்தில், அவரது நட்சத்திரமான கார்த்திகையில் பிறக்கப் போகும் இந்தப் புத்தாண்டு, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு புதிய ஒளியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கடக ராசிக்காரர்களுக்கு இந்தப் புத்தாண்டு எப்படி அமையப் போகிறது? இழந்த வாய்ப்புகள் மீண்டும் கிடைக்குமா? நிதி நிலைமை எப்படி இருக்கும்? விரிவாக பார்க்கலாம்.
லாபகரமான தொடக்கம் :
கடக ராசி நேயர்களே, உங்கள் ராசிநாதன் சந்திரன் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கும் வேளையில் இந்தப் புத்தாண்டு பிறப்பது, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும் என்பதற்கு ஒரு நன்னிமித்தம். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள் சந்தித்த அவமானங்களும், கைநழுவிப் போன வாய்ப்புகளும் இந்த ஆண்டு தேடி வரும். உங்களைக் கண்டு விலகிச் சென்றவர்கள் கூட, இப்போது உங்கள் செல்வாக்கை கண்டு தேடி வந்து பேசுவார்கள். சமுதாயத்திலும், உறவினர்கள் மத்தியிலும் உங்கள் அந்தஸ்து உயரும். பணப்புழக்கம் சீராக இருக்கும் என்றாலும், ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவது நீண்ட கால சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
சனி மற்றும் குருவின் சஞ்சாரம் :
இந்த ஆண்டு ஜூன் 2-ஆம் தேதி நடைபெறவுள்ள குருப்பெயர்ச்சி மிக முக்கியமானது. மே மாதம் வரை 12-ல் இருக்கும் குருவால் சுப செலவுகளும், வெளிநாட்டுப் பயணங்களும் உண்டாகும். ஜூன் முதல் அக்டோபர் வரை குரு உங்கள் ராசிக்குள்ளேயே (ஜென்ம குரு) வருவதால், உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. பித்த நோய்கள் அல்லது செரிமானக் கோளாறுகள் வரலாம். அதேபோல், 9-ஆம் இடத்தில் சனி நீடிப்பதால், தந்தையின் உடல்நலத்தில் அலட்சியம் காட்ட வேண்டாம். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
தவிர்க்க வேண்டியவை :
பிப்ரவரி முதல் ஏப்ரல் 2-ஆம் தேதி வரை செவ்வாய் 8-ல் மறைவதால், யாருக்கும் பணம் கொடுக்கவோ அல்லது மற்றவர்களுக்காக பொறுப்பேற்று ஜாமீன் கையெழுத்து போடவோ வேண்டாம். இது உங்களை சிக்கலில் தள்ளக்கூடும். அதேபோல், ஆண்டின் பிற்பகுதியில் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக இல்லை. எனவே, எதிலும் நிதானம் தேவை. தேவையற்ற முன் கோபத்தை குறைத்துக் கொண்டால் வீண் பழிகளில் இருந்து தப்பிக்கலாம். அக்டோபர் 14-க்குப் பிறகு குரு 2-ஆம் இடத்திற்கு மாறுவது, திடீர் பண வரவையும், பெரிய பதவிகளையும் உங்களுக்குக் கொண்டு வந்து சேர்க்கும்.
தொழில் மற்றும் உத்தியோகம் :
வேலைக்குச் செல்வபவர்களுக்குப் பணிச்சுமை கூடினாலும், அதற்கேற்ற அங்கீகாரமும் பாராட்டும் மேலதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும். வியாபாரிகள் புதிய முதலீடுகளை நிலம் மற்றும் தங்கம் போன்ற அசையா சொத்துக்களில் செய்வது எதிர்காலத்திற்குப் பெரும் லாபத்தைத் தரும். சொந்த வீடு கட்டும் கனவு நனவாகும் காலம் இது. பிள்ளைகளுக்கு திருமண யோகம் கைகூடி வரும்.
இந்த ஆண்டு முழுவதும் மேன்மை பெற, அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடுவதும், வியாழக்கிழமைகளில் சித்தர் பீடங்களில் அன்னதானம் செய்வதும் சிறந்தது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கு (கைகளை இழந்தவர்களுக்கு) உதவுவது உங்கள் கர்ம வினைகளை குறைத்து, வாழ்வில் ஏற்றத்தை தரும்.
Read More : இனி 1 மணி நேரம் வேண்டாம்..!! தினமும் 15 நிமிடங்கள் இப்படி நடந்தாலே போதும்..!! உடல் எடை குறையும், இதயம் ஆரோக்கியமாகும்..!!



