தமிழகத்தில் தற்போது மொத்தம் 2 கோடியே 28 லட்சம் குடும்ப அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் சுமார் 63 ஆயிரம் குடும்பங்கள் தங்களுக்கு எந்தப் பொருட்களும் வேண்டாம் என்று கூறி, அதற்கான பிரத்யேக அட்டைகளைப் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்களில் 3 லட்சத்து 85 ஆயிரம் குடும்பங்கள் சர்க்கரையை மட்டும் முன்னுரிமையாகக் கொண்ட அட்டைகளை வைத்துள்ளனர். இவை தவிர்த்து, மற்ற அனைத்து அட்டைகளும் ‘அரிசி குடும்ப அட்டைகள்’ என்ற பிரிவின் கீழ் வருகின்றன. இவர்களுக்கு அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன.
மொத்தமுள்ள 2.28 கோடி அட்டைகளில் ஒரு கோடியே 14 லட்சம் முன்னுரிமை அட்டைகளுக்கு (PHH) மட்டுமே மத்திய அரசு 20 கிலோ அரிசியை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக, இரண்டு நபர்கள் மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு மத்திய அரசு 12 கிலோ அரிசியை மட்டுமே ஒதுக்குகிறது. அத்தகைய சூழலில், விடுபட்ட 8 கிலோ அரிசியைத் தமிழக அரசே தனது சொந்த நிதியிலிருந்து வழங்குகிறது. இது தவிர, மீதமுள்ள ஒரு கோடியே 14 லட்சம் அரிசி குடும்ப அட்டைகளுக்கான அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் மாநில அரசே முழுமையான நிதிச் சுமையைத் தாங்கி விநியோகம் செய்து வருகிறது.
இந்நிலையில், பொது விநியோகத் திட்டத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் பாமாயிலுக்குப் பதிலாக, தேங்காய் எண்ணெயை வழங்க வேண்டும் என்பதே தமிழக விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. குறிப்பாக, மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த தென்னை விவசாயிகள், தேங்காய் விலைச் சரிவிலிருந்து தங்களைக் காக்க அரசு இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். பாமாயில் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தேங்காய் உற்பத்தியைப் பெருக்க இதுவே சரியான வழி எனப் பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
இந்த சூழலில் தான், பாமாயிலுக்கு வழங்கப்படுவதைப்போல், தேங்காய் எண்ணெய்க்கு ரூ.100 மானியத் தொகை வழங்கினால் விலை குறையும் என்றும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்வது குறித்து முதலமைச்சர் முக.ஸ்டாலினுடன் கலந்து பேசி விரைவில் முடிவு எடுக்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
Read More : இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்..!! சமையல் எண்ணெய் விலை அதிரடியாக குறைகிறது..!!



