தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அரணாக விளங்குவது ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, வெறும் காகிதமல்ல; அது விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு காப்பீட்டு ஆவணம். குறிப்பாக, இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் பெண் உறுப்பினர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது.
இத்திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித்தொகையாக 10,000 ரூபாயும், பேறுகாலத்தின் போது மகப்பேறு நிதியுதவியும் வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல், எதிர்பாராத விபத்து நேரிட்டால் நிவாரணத் தொகை, இயற்கை மரணத்திற்கு ஈமச்சடங்கு நிதி மற்றும் முதியோர் ஓய்வூதியம் என ஒரு மனிதரின் வாழ்நாள் முழுவதும் தேவைப்படும் நிதி உதவிகளை இந்த அடையாள அட்டை உறுதி செய்கிறது.
மேலும், விவசாயிகளின் பிள்ளைகள் தடையின்றி உயர்கல்வி பயில ஏதுவாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையும் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இத்திட்டத்தில் இணைய 18 முதல் 65 வயதிற்குட்பட்ட நிலமற்ற விவசாயக் கூலிகள் அல்லது குறைந்த நிலம் கொண்ட விவசாயிகள் தகுதியுடையவர்கள். நிலம் வைத்திருப்பவர்கள் எனில், 2.50 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5 ஏக்கர் புன்செய் நிலத்திற்கு மேல் வைத்திருக்கக் கூடாது என்பது விதியாகும்.
தகுதியுள்ள பெண்கள் தங்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கிப் புத்தக நகல் மற்றும் புகைப்படங்களுடன் தங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலரை (VAO) அணுகலாம் அல்லது அருகில் உள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். அரசின் இந்த நேரடி நிதியுதவிகள், விளிம்பு நிலையில் உள்ள விவசாய குடும்பங்களுக்குப் பெரும் பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குகின்றன.
Read More : ஆதார் கார்டு மூலம் ரூ. 90,000 கடன்..! மோடி அரசு சொன்ன குட்நியூஸ்..!



