தமிழக அரசின் முத்திரை பதித்த திட்டங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ள ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்’, இன்று சுமார் 1.30 கோடி பெண்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. மாதம் தோறும் தடையின்றி வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் 1,000 ரூபாய், சாமானிய பெண்களின் அன்றாடத் தேவைகளான காய்கறிகள் வாங்குவது முதல் மருத்துவச் செலவுகள் மற்றும் சிறு சேமிப்புகள் வரை பெரும் பக்கபலமாக அமைந்துள்ளது. வறுமையின் பிடியில் இருக்கும் குடும்பங்கள், நீண்ட நாள் ஆசையான ஆன்மீக சுற்றுலா மற்றும் கோவில் வழிபாடுகளுக்கு கூட இந்தத் தொகையை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
பெண்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டம், தற்போது இரண்டாம் கட்ட விரிவாக்கத்தையும் கண்டுள்ளது. இருப்பினும், தகுதியிருந்தும் இன்னும் இத்திட்டத்தின் கீழ் இணையாத பல பெண்கள், அரசின் அடுத்தகட்ட அறிவிப்பை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல், தமிழகப் பெண்கள் மத்தியில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுகவின் தேர்தல் அறிக்கையில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. நிதிச்சுமை மற்றும் திட்டத்தின் நடைமுறைச் சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, தற்போது வழங்கப்படும் 1,000 ரூபாயுடன் கூடுதலாக 500 ரூபாய் சேர்த்து, மாதம் 1,500 ரூபாயாக உயர்த்தப்படலாம் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் பிரசாரத்தின் போது முன்கூட்டியே வெளியாக வாய்ப்புள்ளது.
உத்தேசமாக, வரும் மார்ச் மாத இறுதிக்குள் இந்த உயர்வு குறித்த தெளிவான அறிவிப்பை திமுக வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் பட்சத்தில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்த்தப்பட இருக்கும் 1,500 ரூபாய் தொகை பெண்களின் வங்கி கணக்கிற்கு வந்து சேர வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. அரசின் இந்த அடுத்தகட்ட நகர்வு, தேர்தல் களத்தில் ஆளுங்கட்சிக்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.



