பெண் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து கவலைப்படும் பெற்றோருக்கு, மத்திய அரசு வழங்கி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டம்’ (Sukanya Samriddhi Yojana) ஒரு வரப்பிரசாதமாக திகழ்கிறது. குறிப்பாக மகளின் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்காக நிதிச் சிக்கலின்றி திட்டமிட விரும்புவோருக்கு, சந்தையில் உள்ள மற்ற சேமிப்புகளை விட இது அதிக லாபகரமானதாக உள்ளது.
திட்டத்தின் சிறப்பம்சங்கள் : 2015-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ், பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயது வரை எப்போது வேண்டுமானாலும் தபால் நிலையங்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கிகளில் கணக்கை தொடங்கலாம். இத்திட்டத்தின் மிக முக்கிய ஈர்ப்பு அதன் வட்டி விகிதம் ஆகும். தற்போது வழங்கப்பட்டு வரும் 8.2% வட்டி விகிதமானது, மார்ச் 2026 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான வங்கி டெபாசிட்டுகளை விட மிக அதிகம் என்பதுடன், இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி விலக்கும் உண்டு.
முதலீடும் வருமானமும் : குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். ஒரு கணக்கை தொடங்கி முதல் 15 ஆண்டுகள் மட்டும் தவணை செலுத்தினால் போதுமானது. மீதமுள்ள 6 ஆண்டுகள் (மொத்தம் 21 ஆண்டுகள் முதிர்வு காலம்) நீங்கள் பணம் செலுத்தத் தேவையில்லை. ஆனால், உங்கள் முதலீட்டிற்கான வட்டி மட்டும் கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும்.
எப்படி ரூ.70 லட்சத்தை ஈட்டலாம்..? உதாரணத்திற்கு, ஒரு பெண் குழந்தைக்கு 5 வயதாக இருக்கும்போது, மாதம் ரூ.12,500 (ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம்) இத்திட்டத்தில் சேமிக்க தொடங்கினால், 15 ஆண்டுகளில் உங்களது மொத்த முதலீடு ரூ.22.5 லட்சமாக இருக்கும். ஆனால், அக்குழந்தைக்கு 21 வயதாகும் போது வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.72 லட்சம் வரை முதிர்வுத் தொகையாகப் பெற முடியும். இதில் வட்டி மட்டுமே சுமார் ரூ.49 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான ஆவணங்கள் என்ன..? இந்தக் கணக்கைத் தொடங்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழ், பெற்றோரின் ஆதார் மற்றும் பான் கார்டு ஆகிய ஆவணங்கள் போதுமானது. மகளின் எதிர்காலத்தைச் சேமிப்பின் மூலம் வலுப்படுத்த நினைக்கும் நடுத்தர வர்க்கப் பெற்றோருக்கு, செல்வ மகள் சேமிப்புத் திட்டம் ஒரு மிகச்சிறந்த பாதுகாப்பு வளையமாகும்.
Read More : “நந்தி காதில் சொன்னால் ஈசன் கேட்பாரா”..? காலம் காலமாக தொடரும் ரகசிய வழிபாட்டின் பின்னணி..!!



