தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்துப் பலமான வியூகங்களை அமைத்து வருகிறது. இருப்பினும், கட்சியின் உட்கட்சிப் பூசல் தொடர்ந்து நீடிப்பதால், எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளின் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.
அதிமுக-வை ஒருங்கிணைக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்கள் தொடர்ந்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் சூழல் உள்ளது. சமீபத்தில், அதிமுகவின் மூத்த தலைவர் செங்கோட்டையன் கட்சியில் இருந்து விலகி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது அதிமுக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
இத்தகைய சவால்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி மாற்றுக் கட்சியினரைக் கட்சியில் இணைக்கும் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக, அதிமுக-வில் இருந்து பிரிந்து சென்று டிடிவி தினகரனின் அமமுக-வில் ஐக்கியமான நிர்வாகிகள் பலரும் அண்மைக்காலமாக மீண்டும் தாய் கழகமான அதிமுக-வில் இணைந்து வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது அமமுக-வின் அரியம்பாளையம் பேரூராட்சி செயலாளர் துரைசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்துள்ளார். அவருடன் அமமுக ஒன்றிய செயலாளர் கே.சி. சண்முகம், வார்டு செயலாளர் கோபால் அசோகன் உட்பட 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மீண்டும் அ.தி.மு.க.வில் இணைந்தனர். உட்கட்சிப் பூசல் ஒருபுறம் இருந்தாலும், பிரிந்து சென்ற நிர்வாகிகள் மீண்டும் திரும்புவது, வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள அதிமுக-வுக்கு சற்றுப் பலம் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



