மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே துள்ளுக்குட்டிநாயக்கணூர் கிராமத்தில், குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பெற்ற மகனைக் கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துள்ளுக்குட்டிநாயக்கணூரைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் பாண்டி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், நேற்றைய தினம் வழக்கம் போல் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது, இருவருக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இதில் ஆத்திரமடைந்த மாரியப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மகன் பாண்டியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பாண்டி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர், இச்சம்பவம் குறித்து எம்.கல்லுப்பட்டி காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உயிரிழந்த பாண்டியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், இந்த கொடூரச் செயலைச் செய்த தந்தை மாரியப்பனை போலீசார் கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடிபோதையில் பெற்ற மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



