திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அருகே மட்டப்பிறையூர் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சரவணன் என்ற கூலித் தொழிலாளி, மதுபோதையில் இருந்த ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று, சரவணன் வழக்கம் போல் தனது வேலையை முடித்துவிட்டு, இரவு சுமார் 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த குமார் என்பவர் சாலையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்களால் கல்லால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சரவணன் அவ்வழியே வந்த நேரத்தில், அவரை இடைமறித்த குமார், “நீதான் என்னை கல்லால் அடித்தாய், உண்மையைச் சொல்!” என்று வாக்குவாதம் செய்துள்ளனர்.
ஆனால், சரவணன் மறுத்த போதும், “அடித்தவர்கள் யார் என்று உனக்குத் தெரியும், மறைக்காதே” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் குமார். வாக்குவாதம் முற்றிய நிலையில், குமார் தனது நண்பர்களான பார்த்திபன், இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகியோரை வரவழைத்தார். குடிபோதையில் இருந்த இந்தக் கும்பல், சரவணனை சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்று, குமாரின் வீட்டில் இருந்த வேப்பமரத்தில் கட்டி வைத்தது.
பின்னர், “அடித்தவர் யார் என்று சொல்லாவிட்டால் கையை வெட்டிவிடுவோம்” என்று மிரட்டி, சினிமா பாணியில் சரவணனின் இரண்டு கைகளிலும் உள்ள கைவிரல்களைக் கொடூரமாக வெட்டினர். படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் அலறிக் கொண்டிருந்த சரவணனின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்தனர்.
ஆனால், குடிபோதைக் கும்பலின் அராஜகத்தைக் கண்டு, அவர்களைத் தடுக்காமல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர். நிலைமை கைமீறிச் செல்வதைக் கண்ட சிலர் போளூர் காவல் நிலையத்திற்குத் தகவல் அளித்தனர். காவல்துறை வருவதை அறிந்த குமார் மற்றும் அவரது நண்பர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். பின்னர், சரவணனை மீட்ட போலீசார், அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் உடனடியாக சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போளூர் காவல்துறையினர், தலைமறைவான குமார், பார்த்திபன், இளையராஜா மற்றும் சந்திரசேகர் ஆகிய நான்கு குற்றவாளிகளையும் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



