நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியைச் சேர்ந்த 16 வயது பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி 8ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த நிலையில், தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை நிறுத்தியுள்ளார். பின்னர், திருப்பூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி ஒரு தனியார் மில்லில் வேலைக்குச் சென்று வந்துள்ளார்.
அப்போது, அங்கு பணியாற்றிய 21 வயது இளைஞருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அவ்வபோது வெளியே சென்று ஊர் சுற்றி வந்துள்ளனர். மேலும், சில சமயங்களில் ரூம் எடுத்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதன் விளைவாக அந்த மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதற்கிடையே, சமீபத்தில் குன்னூருக்கு திரும்பிய அவர், கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது தந்தை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள், 8 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
இதனைக் கேட்டு பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், மருத்துவமனையிலேயே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞர் தற்போது துபாயில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.