புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற பாஜக விழாவில் பேசிய தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார். மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய நிதி நெருக்கடி மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் குறித்து அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார்.
தமிழகத்தின் கடன் சுமை விண்ணைத் தொட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அண்ணாமலை, இன்று மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் அட்டை மீதும் 4 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான கடன் சுமை இருப்பதாக குற்றம் சாட்டினார். முதல்வர் ஸ்டாலின் தான் அளித்த 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் கூறுகிறார். ஆனால், உண்மையில் திமுக தனது இணையதளத்தில் இருந்து மாவட்ட வாரியான வாக்குறுதிப் பட்டியலையே நீக்கிவிட்டது என்று அவர் பரபரப்பை கிளப்பினார்.
சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்துப் பேசுகையில், “தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கானல் நீராகிவிட்டது. பெண்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டிய காவலர்களுக்கே இங்குப் பாதுகாப்பு இல்லை. அமித்ஷா அவர்களின் நடவடிக்கையால் தேசமெங்கும் நக்சலிசம் ஒழிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் மட்டும் சூழல் தலைகீழாக உள்ளது” என்று அவர் கூறினார்.
மேலும், தமிழகத்தின் முன்னணி தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு இடம் பெயருவதற்கு திமுகவின் தவறான கொள்கைகளே காரணம் என்றும், பொங்கலுக்குப் பண உதவி வழங்காத அரசு இதுவென்றும் அவர் விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டதாக குறிப்பிட்ட அண்ணாமலை, டீக்கடை பெஞ்ச் முதல் ஆட்டோ ஓட்டுநர்கள் வரை அனைவரும் திமுகவை வீட்டிற்கு அனுப்ப தயாராகிவிட்டதாக தெரிவித்தார். இனி வரும் 90 நாட்களும் தமிழக அரசின் தோல்விகளை ஒவ்வொரு வீதிக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
Read More : தடாலடி அறிவிப்பு..!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 பொங்கல் பரிசுத்தொகை..!! அதிமுகவின் மெகா வாக்குறுதி..!!



