உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவின் அலிகர் பகுதியைச் சேர்ந்த அமித் குமார், தனது மனைவி ரூபி மற்றும் 3 குழந்தைகளுடன் கர்ஹி சௌகாண்டி கிராமத்தில் வாடகைக்கு வசித்து வந்தார். அதே பகுதியில் ராகுல் (36) என்பவரும் வாடகைக்கு தனியாக வசித்துள்ளார். ரூபியும் ராகுலும் ஒரே தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராகப் பணிபுரிந்துள்ளனர்.
இதனால், ராகுல் தினமும் ரூபியைத் தனது பைக்கில் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்வது மட்டுமின்றி, தினமும் காலையிலும் மாலையிலும் அமித்தின் வீட்டிலேயே மதிய உணவையும் சாப்பிட்டு வந்துள்ளார். இதன் காரணமாக நாளடைவில் ரூபிக்கும் ராகுலுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்று குடிபோதையில் இருந்த ராகுல் அமித்தின் அறைக்கு வந்துள்ளார். அங்கே ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, அமித்தின் மகனும் பக்கத்து வீட்டுக்காரர்களும் ராகுலை வீட்டின் வாசலில் பூட்டி வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து, சந்தையில் இருந்து திரும்பி வந்த அமித் மற்றும் ரூபி ஆகியோர் ராகுலுடன் வீட்டு வாசலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ராகுல் மீண்டும் வீட்டிற்குள் நுழைய முயன்றபோது, கோபத்தின் உச்சிக்குச் சென்ற அமித், தனது நண்பர் உமேஷுடன் சேர்ந்து ராகுலின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், படுகாயம் அடைந்த ராகுல் வீட்டு வாசலிலேயே சரிந்து விழுந்தார்.
உடனடியாக ராகுலை அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணையில், தனது மனைவிக்கு ராகுலுடன் தகாத உறவு இருந்ததை அமித் ஒப்புக்கொண்டார். இந்த ஆத்திரத்தில்தான் நண்பர் உமேஷுடன் சேர்ந்து ராகுலைக் குத்திக் கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, அமித் குமார் மற்றும் உமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



