தருமபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கலைச்செல்வன் (32), சேலத்தைச் சேர்ந்த பிரியராகினி என்ற பெண்ணைக் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது காதலுக்குப் பிரியராகினியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதன் காரணமாக, கடந்த செப்டம்பர் 4-ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, கிருஷ்ணகிரியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறியதை அறிந்த பிரியராகினியின் பெற்றோர், அவர்களை தேட தொடங்கினர்.
பாதுகாப்புக் கருதி, இருவரும் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம் அடைய முடிவெடுத்து காரில் புறப்பட்டனர். ஆனால், அவர்களைப் பிடிக்க ஒரு கும்பல் டோல்கேட்டில் காத்திருந்தது. இதனை அறிந்த கலைச்செல்வன், மாற்றுப் பாதையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.
அங்கும் மற்றொரு கும்பல் அவர்களைத் துரத்திச் சென்றுள்ளது. நீண்ட தூரம் துரத்தியதால், மண் சாலையில் சென்ற கார் நடுவழியில் நின்றுவிட்டது. காரிலிருந்து இறங்கி ஓடிய காதல் ஜோடியை துரத்திப் பிடித்த கும்பல், இருவரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் கலைச்செல்வன் மயங்கி விழுந்தார். பிரியராகினியின் கழுத்தில் இருந்த தாலியையும் அறுத்துள்ளனர். இதையடுத்து, அங்கிருந்த மக்கள் காயமடைந்த கலைச்செல்வனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.