கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, அவரது மனைவியே சேலையால் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (32), அம்சவள்ளி (28) ஆகிய இருவரும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இரு வீட்டார் எதிர்ப்பையும் மீறி இணைந்த இந்த தம்பதியினர், கடந்த 9 ஆண்டுகளாக ஓசூர் தேர்பேட்டை பகுதியில் வசித்து வந்தனர். பார்த்திபன் மூட்டை தூக்கும் தொழிலாளியாகவும், அம்சவள்ளி கட்டிட தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கட்டிட வேலைக்குச் சென்ற இடத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கரண் தாஸ் (21) என்ற இளைஞருடன் அம்சவள்ளிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி, கடந்த 3 ஆண்டுகளாக தொடர்ந்து வந்துள்ளது. பார்த்திபன் வேலைக்கு சென்ற நேரங்களில், கரண் தாஸ் அடிக்கடி அம்சவள்ளியின் வீட்டிற்கு வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.
இந்த விவகாரம் ஒருகட்டத்தில் பார்த்திபனுக்கு தெரியவரவே, அவர் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், அம்சவள்ளி தனது தவற்றை ஒப்புக்கொள்ளாமல் கணவனை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த பார்த்திபன் குடிபோதைக்கு அடிமையானதுடன், தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. தனது கள்ளக்காதலுக்கு கணவன் முட்டுக்கட்டையாக இருப்பதை உணர்ந்த அம்சவள்ளி, அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று இரவு, பார்த்திபன் மதுபோதையில் வீட்டிற்கு வந்தபோது, அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அம்சவள்ளி, தனது சேலையால் பார்த்திபனின் கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர், எவ்விதச் சலனமும் இன்றி, தனது கணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்களுக்கும் போலீசாருக்கும் தகவல் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பார்த்திபனின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், முன்னுக்குப் பின் முரணான தகவல்களை கூறிய அம்சவள்ளி, இறுதியில் உண்மையை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.



