தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் குறித்த எச்சரிக்கை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நாளை (அக்டோபர் 18) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. நேற்று கடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
நேற்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, வரும் 19-ம் தேதி வாக்கில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில், கேரள கர்நாடக பகுதிகளுக்கு அப்பால் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இத்தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 24ஆம் தேதி மற்றொரு காற்றழுத்த தாழ்வு உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும், அது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் மாஹே பகுதிகளில் இன்று முதல் 21ஆம் தேதி வரை பலத்த மழை அல்லது கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.



