திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் உயிரிழந்த அஜித்தின் தாயார் மற்றும் ரிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ரொம்ப Sorry-மா. கடுமையான நடவடிக்கை எடுக்க சொல்லி இருக்கிறேன். தைரியமா இருங்க” என்று ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து அஜித்தின் சகோதரரிடம் பேசிய அவர் “ நடக்க கூடாதது நடந்துவிட்டது.. தைரியமா இருங்க.. கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் தண்டனை வாங்கி தரப்படும்..” என்று தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நகை திருட்டு புகாரில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட அஜித் என்ற இளைஞர் உயிரிழந்தார்.. காவல்துறை கொடூரமாக தாக்கியதே காரணம் என்பது பிரேத பரிசோதனையில் உறுதியாகி உள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 5 காவலர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஜித்குமாரின் மரண வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மானாமதுரை டிஎஸ்பி சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்து தமிழக காவல்துறை உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் சிவகங்கை மாவட்ட எஸ்பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக “ அஜித்குமார் கொல்லப்பட்டுள்ளார்.. அஜித் தாக்கப்படும் வீடியோவை எங்கிருந்து எடுத்தீர்கள்? எவ்வளவு நேரம் எடுத்தீர்கள்? அஜித் தாக்கப்பட்ட இடத்தில் ரத்தக்கறைகள் இருந்ததா? அஜித் குமார் மீது இவ்வளவு காயங்கள் உள்ளது? எதை வைத்து அடித்தீர்கள்.. சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை எஸ்.ஐ ஒருவர் எடுத்து சென்றுள்ளார். காவல் நிலையத்தில் ஏன் விசாரணை நடத்தவில்லை..?
அரசின் நடவடிக்கை போதுமானதாக இல்லை.. உயரதிகாரிகளை பாதுகாக்கும் பொருட்டு அரசின் நடவடிக்கை உள்ளது.. அரசு தாக்கல் செய்த அறிக்கையில் அவ்வளவு ஓட்டைகள் உள்ளது.. இதை வைத்து குற்றவாளிகளுக்கு விடுதலை வாங்கி கொடுத்துவிடுவீர்கள்.. காவலர்கள் கைது செய்தது என்பது கண் துடைப்பு நடவடிக்கை தான்.. வரும் காலங்களில் காவல்துறையினர் யாரும் இப்படி நடந்து கொள்ளக்கூடாது.. கல்வியறிவு அதிகம் உள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வு நடப்பது வியப்பாக உள்ளது.. பல இடங்களுக்கு கொண்டு சென்று அடித்து தாக்கி உள்ளனர். நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோம்.. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.. நகை திருட்டு புகாரில், தங்க நகைகள் இன்னும் மீட்கப்படவில்லை.. அந்தரங்க உறுப்புகளிலும், முகத்திலும் மிளகாய் தூளை தூவியுள்ளனர்.. கொலைகாரர் கூட இவ்வளவு கொடூரமாக தாக்கமாட்டார்.. ” என்று காட்டமாக கேள்விகளை எழுப்பினர்.
நாட்கள் செல்ல செல்ல சாட்சியங்கள் அழிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறிய நீதிபதிகள் அஜித் குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி உடனடியாக நீதி விசாரணை உடனடியாக தொடங்க வேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தனர்.. திருப்புவனம் காவல் ஆய்வாளர்கள் வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதியிடம் ஒப்படைக்கவும் உத்தரவிட்டனர்.. ஜூலை 8-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் அதுவரை வழக்கு தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர். எனவே இந்த வழக்கு விசாரணை மாவட்ட நீதிபதியின் நேரடி விசாரணையின் கீழ் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : கைதான காவலர்கள் வழுக்கி விழுவார்களா? தப்பி ஓட முயற்சி என்ற செய்தி வருமா? திமுக MLA காட்டமான பதிவு..