உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வந்துள்ள நிலையில், தற்போது அமெரிக்காவில் ‘நோரோவைரஸ்’ (Norovirus) என்ற மற்றொரு வைரஸ் பாதிப்பு சத்தமே இல்லாமல் வேகமாகப் பரவி வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. சமீப வாரங்களாக இந்த வைரஸ் பாதிப்பு விகிதம் கணிசமாக உயர்ந்து, அந்நாட்டில் ஒரு புதிய சுகாதார சவாலை உருவாக்கியுள்ளது. இது பொதுமக்களிடையே இயல்பாகவே அச்சத்தை அதிகரித்துள்ளது.
நோரோவைரஸ் என்றால் என்ன..?
நோரோவைரஸ் என்பது இரைப்பைக் குடல் அழற்சியை (Gastroenteritis) ஏற்படுத்தும் ஒரு நோய்த்தொற்று ஆகும். இது மிகவும் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வாந்தி அல்லது மலத்தின் மூலம் இந்த வைரஸ் மிக வேகமாகப் பரவுகிறது. இதன் மிக அச்சுறுத்தும் அம்சம் என்னவென்றால், நோயிலிருந்து ஒருவர் குணமடைந்த பிறகும்கூட, சுமார் இரண்டு வாரங்கள் வரை அவரது உடலில் இருந்து இந்த வைரஸ் மற்றவர்களுக்குப் பரவ வாய்ப்புள்ளது என்பதுதான். இந்த நீடித்த பரவும் காலம்தான் இந்த நோயை மிகவும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.
அறிகுறிகள் என்ன..?
நோரோவைரஸ் தொற்றின் பிரதான அறிகுறிகளாக குமட்டல், கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலிகள் ஆகியவை உள்ளன. அமெரிக்காவில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த வைரஸின் பாசிட்டிவ் விகிதம் வெறும் 7% ஆக இருந்தது. ஆனால், தற்போது அது இரண்டு மடங்காக உயர்ந்து 14% ஆக அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் இந்த நோரோவைரஸ் ஒரு பெரிய சுகாதாரச் சிக்கலை உருவாக்குகிறது. ஒவ்வொரு வருடமும் இலட்சக்கணக்கான மக்கள் இந்தத் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் குறைந்தது ஒரு லட்சம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற வேண்டியுள்ளது. மேலும், இந்த வைரஸ் காரணமாக ஆண்டுக்கு சுமார் 900 இறப்புகளும் ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸால் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக உள்ளவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.
அமெரிக்காவில் கழிவுநீரில் இந்த நோரோவைரஸ் கண்டறியப்படுவது நாடு முழுவதும் 69% அதிகரித்துள்ளதாம். குறிப்பாக லூசியானா, மிச்சிகன் மற்றும் இண்டியானா போன்ற மாகாணங்களில்தான் இதன் பாதிப்பு மிகத் தீவிரமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அந்நாட்டு அதிகாரிகள், பாதிப்புகள் அதிகரித்தாலும் இது மிகப் பெரிய உயிர் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது அல்ல என்றே கருதுகின்றனர்.
சுகாதாரப் பழக்கம் : கழிப்பறையைப் பயன்படுத்திய பிறகும், உணவு உண்பதற்கு முன்பும் சோப்பு மற்றும் தண்ணீர் பயன்படுத்தி கைகளை குறைந்தது 20 விநாடிகள் வரை நன்கு கழுவ வேண்டும்.
தனிமைப்படுத்துதல் : திடீரென நோய் பாதிப்பு ஏற்பட்டால், மற்றவர்களுடன் நெருங்கிப் பழகுவதைத் தவிர்த்து, உங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமையலில் கவனம் : வைரஸ் பாதிப்பு இருக்கும்போது மற்றவர்களுக்காகச் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சமைக்கும்போது அதன் மூலம் வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.
உணவுப் பாதுகாப்பு : அசைவ உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும். பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாகக் கழுவிய பின்னரே பயன்படுத்த வேண்டும். சரியாக வேகாத உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.
நீரிழப்பைத் தவிர்த்தல் : இந்த வைரஸ் பாதிப்பின்போது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீரிழப்பு (Dehydration) ஏற்படும். எனவே, அந்த நேரத்தில் அதிக அளவில் தண்ணீரைத் தொடர்ச்சியாகக் குடித்து நீரிழப்பை தவிர்க்க வேண்டும்.



