விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், கொள்ளை முயற்சியை தடுக்க முற்பட்ட இரு கோவில் காவலர்கள், மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோவிலில், நேற்று இரவு காவலர்களான பேச்சிமுத்து (50) மற்றும் சங்கரபாண்டியன் (65) ஆகியோர் இரவுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில் வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர்கள், உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தைத் திருட முயன்றுள்ளனர்.
மர்ம நபர்களின் இந்தச் செயலைக் கண்ட காவலர்கள் இருவரும் அவர்களைத் தடுக்க முற்பட்டுள்ளனர். அப்போது, ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் காவலர்கள் இருவரையும் கொடூர ஆயுதங்களால் வெட்டிப் படுகொலை செய்துள்ளனர். பின்னர், உண்டியல் பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். கோவில் உண்டியல் சேதமடைந்திருப்பது இந்தக் கொள்ளை முயற்சியை உறுதிப்படுத்துகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் மற்றும் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் தலைமையில் போலீஸார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்ட காவலர்கள் இருவரின் உடல்களையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், கோவிலில் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் அல்லது நகைகள் ஏதேனும் கொள்ளையடிக்கப்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளைக் கண்டறிய, விருதுநகரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது. சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றிய போலீஸார், அக்கம் பக்கத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.



