தெலங்கானாவைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் மருத்துவமனையிலிருந்து மருந்தை திருடி, கலப்புத் திருமணத்தை எதிர்த்த தனது பெற்றோரை விஷ ஊசி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி ஊள்ளது.
தெலுங்கானாவின் விகாராபாத் மாவட்டத்தில் உள்ள யாச்சாரம் கிராமத்தில், 25 வயது செவிலியர் ஒருவர், தனது சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், தனது மருத்துவ அறிவைப் பயன்படுத்தி, அதிகப்படியான மருந்துகளைச் செலுத்தி தனது பெற்றோரைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜனவரி 25 அன்று, என். தசரதம் (58) மற்றும் அவரது மனைவி லட்சுமி (54) ஆகியோர் தங்கள் வீட்டில் இறந்து கிடந்தது குறித்து தகவல் தங்களுக்கு கிடைத்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். ஆரம்பத்தில், தசரதம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், கணவரின் மரண அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் லட்சுமி சிறிது நேரத்திலேயே இறந்துவிட்டதாகவும் உறவினர்கள் கூறினர்.
காவல்துறையினர் வீட்டை ஆய்வு செய்தபோது, சம்பவ இடத்தில் இருந்து ரத்தக்கறை படிந்த ஒரு ஊசியை கைப்பற்றினர். இந்த வழக்கை சந்தேகத்திற்கிடமான மரணமாகப் பதிவு செய்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, இருவரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர்.
விசாரணையில், தம்பதியரின் மகன் மற்றும் மூன்று மகள்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியது. இளைய மகளான சுரேகாவின் வாக்குமூலம்தான் சந்தேகத்தை ஏற்படுத்தியது, இது தீவிர விசாரணைக்கு வழிவகுத்தது.
விசாரணையின் போது, சுரேகா ஜனவரி 24 ஆம் தேதி இரவு தனது பெற்றோரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தாரூர் வட்ட ஆய்வாளர் சி. ரகுராமுலு இதுகுறித்து பேசிய போது “சுரேகா சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிகிறார். மருத்துவமனை அதிகாரிகளுக்குத் தெரியாமல், அறுவை சிகிச்சை அரங்கில் நோயாளிகளின் தசைகளைத் தளர்த்தப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தை அவர் திருடியுள்ளார். இந்த மருந்தை அதிக அளவில் செலுத்தினால் உயிரிழப்பு ஏற்படும்,” என்று தெரிவித்தார்.
சுரேகா குற்ற நடந்த அன்று வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு விகாராபாத் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். இரவு உணவிற்குப் பிறகு, பெற்றோரைத் தளர்த்தும் மருந்து கொடுப்பதாகக் கூறி, இருவருக்கும் கொலை செய்யும் அளவுக்கு அதிகப்படியான மருந்தை ஊசி மூலம் செலுத்தியுள்ளார்.
பின்னர், கைப்பற்றப்பட்ட மருந்தின் வரிசை எண்ணை காவல்துறை கண்டறிந்து, மருத்துவமனை இருப்புப் பதிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தது. அது சுரேகா பணிபுரிந்த தனியார் மருத்துவமனையில் இருந்த மருந்துப் பெட்டகத்தைச் சேர்ந்தது என்பதை உறுதிப்படுத்தியது. தசரதம் ஒரு விவசாயி என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சுரேகாவின் காதலருக்கு இந்தக் குற்றம் பற்றி எதுவும் தெரியாது என்று கூறி, இந்த வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.. குற்றம் சாட்டப்பட்ட சுரேகா கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
Read More : பட்ஜெட்டில் சாமானிய மக்களுக்கு பெரும் நிம்மதி..! இந்த பொருட்களின் விலை குறையுமா..? அல்லது உயருமா?



