ஆவடி பகுதியில் ஒரு வயது பெண் குழந்தை காய்ச்சலால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜசேகர் (40), தனியார் வங்கி ஊழியர். இவரது மனைவி சுகன்யா (31). இவர்களது ஒரு வயது மகள் அனன்யாவிற்கு கடந்த ஒரு வார காலமாக காய்ச்சல் இருந்துள்ளது. குழந்தையின் பெற்றோர், அருகில் உள்ள மருந்துக் கடையில் மருந்துகளை வாங்கிக் கொடுத்துள்ளனர். அதன் விளைவாக, காய்ச்சல் தற்காலிகமாக குறைந்திருக்கிறது.
ஆனால், நேற்று முன்தினம் இரவு திடீரென குழந்தைக்குக் காய்ச்சல் மீண்டும் அதிகரித்தது. இதனால் பதற்றமடைந்த தாய் சுகன்யா, குழந்தையை உடனடியாக ஆவடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மழைக்காலமும் குழந்தை நலனும் :
மழைக்காலம் மற்றும் தட்பவெப்பநிலை மாற்றங்களின்போது காய்ச்சல், சளி போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுவது சகஜம். குறிப்பாக, குழந்தைகளுக்கு காய்ச்சல் வரும்போது சுய வைத்தியம் செய்வதை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்கு ஒருவேளை காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தாலோ, காய்ச்சலின் அளவு அதிகரித்தாலோ அல்லது மூச்சு விடுவதில் சிரமம், வலிப்பு, வாந்தி போன்ற வேறு எந்த அசாதாரண அறிகுறிகள் காணப்பட்டாலோ, பெற்றோர் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது கட்டாயமாகும். மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே மருந்துகளைப் பயன்படுத்துவது குழந்தைகளின் உயிரைப் பாதுகாக்க உதவும்.



