நீண்ட ஆயுள் மற்றும் சாகா நிலை குறித்த விவாதம் சர்வதேச அளவில் வலுப்பெற்றுள்ள நிலையில், ஒரு சீன உயிரித் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், மனிதனின் ஆயுட்காலத்தை 150 ஆண்டுகள் வரை நீட்டிக்கக்கூடிய ஆற்றல் கொண்ட மாத்திரைகளை உருவாக்கி வருவதாக அறிவித்துள்ளது.
இந்த தகவல், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபருக்கு இடையே நடைபெற்ற ஒரு சுவாரஸ்யமான உரையாடலின் எதிரொலியாக வெளியாகியுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில், இரு நாடுகளின் அதிபர்களும் இராணுவ அணிவகுப்பில் நடந்துசெல்லும்போது பேசிக்கொண்ட ஒரு உரையாடல் அருகில் இருந்த ஒலிப்பதிவுக் கருவியில் பதிவானது.
அந்தப் பேச்சில், மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மற்றும் உயிரினங்களின் சாகா நிலை சாத்தியக்கூறுகள் ஆகியவை மையப்படுத்தப்பட்டன. சீன அதிபர் பேசும்போது, “கடந்த காலத்தில் மக்கள் 70 வயதை தாண்டினால் முதியவர்களாக கருதப்பட்டனர், ஆனால் இன்று 70 வயதிலும் உங்களை ஒரு குழந்தைபோல்தான் அழைக்கிறோம்” என்று கூறினார்.
இதற்குப் பதிலளித்த புதின், “மனித உறுப்புகளை தொடர்ந்து மாற்றியமைப்பதன் மூலம், நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அவ்வளவு இளமையுடன் இருக்க முடியும்; சாகா நிலைக்கான சாத்தியக்கூறுகள் கூட உள்ளன” என்று நம்பிக்கை தெரிவித்தார். உலகத் தலைவர்களின் இத்தகைய உரையாடல், ஆயுள் நீட்டிப்பு ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.
இந்த விவாதங்களைத் தொடர்ந்து, லான்வி பயோசயன்சஸ் (Lanwei Biosciences) என்ற சீன ஸ்டார்ட்அப் நிறுவனம், ‘ஆண்டி-ஏஜிங்’ எனப்படும் முதுமை எதிர்ப்பு மாத்திரைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த மாத்திரைகள், உடலில் உள்ள ஆரோக்கியமான செல்களைப் பாதிக்காமல், வயதான அல்லது ஆரோக்கியமற்ற செல்களை மட்டும் இலக்கு வைத்துத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை.
இந்த மாத்திரை, திராட்சை விதை சாற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு சிறப்புச் சேர்மத்தைக் கொண்டு உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆய்வகச் சோதனைகளின் முடிவுகள், இந்த மருந்து வயதான செல்களை அழித்து ஆரோக்கியமான செல்களைப் பாதுகாப்பதன் மூலம் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுவதாகச் சுட்டிக்காட்டுகின்றன.
முறையான மருத்துவ மேற்பார்வையுடன், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினால், மனிதர்கள் 120 வயது வரை வாழ்வது சாத்தியமே என்று லான்வி பயோசயன்சஸ் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த சீன நிறுவனத்தின் முயற்சி, நீண்ட ஆயுள் குறித்த மருத்துவ உலகத்தின் பார்வையை மாற்றி எழுதுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read More : பூனை குறுக்கே போனால் கெட்டதா..? மூடநம்பிக்கைக்கு பின்னால் இருக்கும் வரலாறும், அறிவியலும்..!!



