சென்னையில் தடை செய்யப்பட்ட பிட்புல் என்ற உயர் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கருணாகரன் (48). இவர், சமையல் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலையில் தனது வீட்டின் அருகே கருணாகரன் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த பூங்கொடி என்ற பெண், தனது வளர்ப்பு நாயான பிட்புல் ரக நாயை நடைபயிற்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய், கருணாகரனை கடித்தது. ஆணுறுப்பு, கால், தொடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கடித்து குதறியது. இதில் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். பின்னர், மீண்டும் அவரை நாய் கடிக்க முயன்றபோது, அதன் உரிமையாளர் பூங்கொடி தடுக்க முயன்றுள்ளார். ஆனால், அவரையும் விட்டு வைக்கவில்லை. பூங்கொடியையும் அந்த நாய் கடித்துள்ளது. இதனால், அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து நாயை விரட்டி விட்டு, இருவரையும் கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கருணாகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். நாய் மிகவும் கடுமையாக கடித்த காரணத்தாலும், அவர் மிகவும் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மேலும் பிட்புல் ரக நாயின் உரிமையாளர் பூங்கொடிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டில் வளர்ப்பு நாய்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு சிறுமிகள், முதியவர்கள் என பலரையும் தெருநாய்கள் மற்றும் வீட்டு வளர்ப்பு நாய்கள் கடித்து வரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே உச்சநீதிமன்றம், தெருநாய்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் அதற்கு எதிராகவும், ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது வளர்ப்பு நாய்களாலும் பாதிப்பு என்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதில் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Read More : உங்களுக்கு இந்த மாதிரி கால் வலி வருதா..? மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படும் அபாயம்..!! யாரை அதிகம் பாதிக்கும்..?