சென்னை – மதுரை இடையே தினமும் நடைபெறும் விமானப் போக்குவரத்து சேவையில், நேற்று மதியம் ஏற்பட்ட ஓர் எதிர்பாராத நிகழ்வு, பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியது. சென்னையில் இருந்து சரியாக பகல் 12.40 மணிக்கு புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உட்பட சுமார் 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.
விமானம் மதுரை விமான நிலையத்தை நெருங்கி, பகல் 1.45 மணியளவில் தரையிறங்க ஆயத்தமானது. ஓடுபாதையில் விமானத்தின் சக்கரங்கள் தரையைத் தொட்ட சில வினாடிகளிலேயே, பயணிகளுக்குப் பேரதிர்ச்சியளிக்கும் விதமாக, விமானம் மீண்டும் திடீரென மேல்நோக்கி பறக்க தொடங்கியது. தரையிறங்க வேண்டிய விமானம் மீண்டும் வானில் எழும்பியதால், விமானத்தில் இருந்த பயணிகள் பதற்றமடைந்தனர்.
விமானம் தரையிறங்குவதில் ஏதோ பெரிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுவிட்டதாக பலரும் பதட்டத்துடன் பேசத் தொடங்கினர். நிலைமை சீரற்றிருப்பதை உணர்ந்த விமானி, உடனடியாக மைக் மூலம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டார். “விமானம் தரையிறங்கும்போது, ஓடுபாதையில் அதிகப்படியான வெப்ப அலைகள் காணப்பட்டன. பயணிகளின் பாதுகாப்பு கருதி, தரையிறங்கும் முயற்சியை கைவிட்டு, மீண்டும் வானில் பறந்தோம். இன்னும் சில நிமிடங்களில் பாதுகாப்பான முறையில் விமானம் தரையிறக்கப்படும்” என்று அவர் விளக்கமளித்தார்.
விமானியின் இந்த தெளிவான அறிவிப்பு பயணிகளுக்கு சற்று நிம்மதியை அளித்தாலும், பலரது மனம் திக்திக் என்றே இருந்தது. இதையடுத்து, வானில் 13 நிமிடங்கள் வட்டமடித்த இண்டிகோ விமானம், மீண்டும் ஒரு முயற்சிக்கு பிறகு பாதுகாப்பாக மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பின்னர், அண்ணாமலை உட்பட அனைத்து பயணிகளும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர். இந்த சம்பவம் காரணமாக மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.