வீடுகளில் கரப்பான் பூச்சிகள் மற்றும் மற்ற பூச்சிகளின் தொல்லைகளை கட்டுப்படுத்த, நாம் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் ‘நாப்தலின்’ உருண்டைகள் (Naphthalene Balls). துணிகள் வைக்கும் பீரோக்கள் முதல் கட்டிலின் இடுக்குகள் வரை ஆங்காங்கே போடப்படும் இந்த சிறிய வெள்ளை நிற உருண்டைகள், உண்மையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருள் என்பதைப் பலரும் உணருவதில்லை. குறிப்பாக, சிறு குழந்தைகள் இருக்கும் வீடுகளில் இந்த ‘ரசூண்டைகள்’ பயன்படுத்துவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
நாப்தலின் என்பது பெட்ரோலியப் பொருட்களில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு ஹைட்ரோகார்பன் ஆகும். இது காற்றில் ஆவியாகும்போது வெளியேற்றும் வாசனைதான் பூச்சிகளை விரட்டுகிறது. ஆனால், அந்த வாயுவை நீண்ட நேரம் சுவாசிப்பது குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி மற்றும் மயக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதையும் தாண்டி, மிட்டாய் போன்ற தோற்றத்தில் இருக்கும் இந்த உருண்டைகளை சிறு குழந்தைகள் தவறுதலாக வாயில் போட்டாலோ அல்லது கையில் எடுத்து விளையாடிய பிறகு கைகளைக் கழுவாமல் உணவை உட்கொண்டாலோ, அது ரத்த சிவப்பணுக்களைச் சிதைக்கும் அபாயம் கொண்டது.
சில நேரங்களில் இந்த நச்சுத்தன்மை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களைப் பாதித்து, உயிருக்கே அச்சுறுத்தலாக முடியலாம். குழந்தைகள் தரையில் ஊர்ந்து விளையாடும்போது, மூலைகளில் கிடக்கும் இந்த உருண்டைகளை எளிதில் கண்டெடுத்துவிடும் வாய்ப்பு அதிகம். எனவே, பாதுகாப்பான மாற்றுகளை நோக்கி நாம் நகர வேண்டியது காலத்தின் கட்டாயம். நாப்தலினுக்குப் பதிலாக வேப்பிலை, காய்ந்த எலுமிச்சைத் தோல், கிராம்பு அல்லது வசம்பு போன்ற இயற்கை வாசனைப் பொருட்களைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கும், குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
Read More : காஃபி முதல் உரங்கள் வரை..!! மத்திய பட்ஜெட் எதிரொலியால் அதிரடியாக விலை உயரும் பொருட்கள் என்னென்ன..?



