கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள நஞ்சை மகத்து வாழ்க்கை கிராமத்தில் அமைந்துள்ள பனங்காடு மாரியம்மன் கோயில் மிகுந்த புகழ் பெற்றதாகும். இடப்பெயர்களில் ஒரு சமூகத்தின் வரலாறும் இயற்கைச் சிறப்பும் அடங்கியிருக்கும். “பனங்காடு” என அழைக்கப்படும் இப்பகுதி முன்பு “பாணிகாடு” என்று அறியப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இங்கு வெட்டப்பட்ட சுனைகளிலிருந்து தண்ணீர் எடுத்து பிற பகுதிகளுக்கு கொண்டு சென்றதால், அந்த நிலம் “பாணி (தண்ணீர்) காடு” என அழைக்கப்பட்டது. பிற்காலத்தில், மொழி வழக்கில் அது “பனங்காடு” என மாற்றமடைந்தது.
ஒரு ஊரின் ஆன்மீக வளர்ச்சிக்கு நலனாளர்கள் செய்த பணிகள் மிகப் பெரிய பங்காற்றுகின்றன. பனங்காட்டின் இந்தக் கோயிலை அம்பலவாணன் படையாட்சி என்ற நலனாளர் தான் நிறுவினார். அவர் சிங்கப்பூர் சென்று கடின உழைப்பின் மூலம் செல்வம் சேர்த்தார். ஊரில் கோயில் இல்லாததால், “கோயில் இல்லா ஊரில் குடியிருக்கக் கூடாது” என்ற நம்பிக்கையுடன் தனது சொந்த செலவில் மாரியம்மன் சன்னதி எழுப்பினார்.
அதனால், இக்கோயில் “சிங்கப்பூரார் கோயில்” என்றும் அழைக்கப்பட்டது. பின்பு, அம்பலவாணனின் வழிவந்தவர்கள் கோயிலை தொடர்ந்து பராமரித்து வந்தனர். இந்தக் கோயிலின் சிறப்புகளில் ஒன்று, இங்கு வழிபடுபவர்களுக்கு வெளிநாடு சென்று வேலை வாய்ப்பு கிடைக்கிறது என்ற நம்பிக்கை.
சிறப்புகள்: ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில், மாரியம்மன் மற்றும் விநாயகர் சிலைகளின் மீது சூரிய ஒளி நேரடியாகப் படுகிறது. இது கோயிலின் தனிச்சிறப்பாக கருதப்படுகிறது. குழந்தைப்பேறு, திருமணத் தடைகள், உடல்நோய்கள் குணமடைய இங்கு வழிபடுவோர் எண்ணற்றவர்கள். வெளிநாடு செல்லும் ஆசைகள் நிறைவேற, பக்தர்கள் மனமார வழிபடுகின்றனர்.
சிதம்பரம் அருகே உள்ள பனங்காடு மாரியம்மன் கோயில், பக்தர்களின் தேவைகளுக்கும், கனவுகளுக்கும் நிறைவேற்றமாக விளங்குகிறது. வெளிநாடு செல்லும் வாய்ப்பு முதல், குழந்தைப்பேறு, திருமணத் தடைகள் நீக்கம் வரை பல்வேறு விருப்பங்களுடன் மக்கள் இங்கு வழிபடுகின்றனர். வரலாறும், நம்பிக்கையும், அபூர்வமான சிறப்புகளும் இணைந்த இக்கோயில், தமிழகத்தில் ஒரு தனித்துவமிக்க தலமாக விளங்குகிறது.
Read more: செப்டம்பர் மாதம் தொட்டதெல்லாம் பொன்னாகும் அதிர்ஷ்ட ராசிகள் இவைதான்.. உங்க ராசி இதுல இருக்கா..?