தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் விநாயகர், முருகன், விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்கள் தனித்தன்மையுடன் வழிபடப்படுகின்றன. ஆனால் மயிலாடுதுறை அருகே உள்ள மேலப்பாதி என்ற கிராமத்தில், ஒரே ஆலயத்தில் இரட்டை ஆஞ்சநேயர் காட்சி தருவது என்பது மிகவும் அபூர்வமான ஒன்றாகும்.
புராண கதைகளின்படி, சுமார் 500 ஆண்டுகளுக்கு முன், மேலப்பாதி கிராம மக்கள் காவிரி ஆற்றை கடக்க மூங்கிலால் பாலம் அமைக்க முயன்றனர். அப்போது இரண்டு மனித குரங்குகள் வந்து மக்களுக்கு உதவின. பாலம் அமைத்து முடித்த பின் அவை இரண்டும் அருகிலிருந்த இலுப்பை காட்டில் ஓய்வு எடுத்தன. சிறிது நேரத்தில், அவை ஆஞ்சநேயரின் ரூபமாக ஒன்றிணைந்தன என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
இதனால், அந்த இடத்தில் மக்கள் இரட்டை ஆஞ்சநேயர் ஆலயத்தை நிறுவினர். இந்த ஆஞ்சநேயரை ஒருமுறை வழிபட்டால், வேண்டுதல் இரட்டிப்பு பலனுடன் நிறைவேறும் என மக்களால் நம்பப்படுகிறது. பொதுவாக விநாயகரை வணங்கி காரியம் தொடங்குவது போல, இங்கு மக்கள் இரட்டை ஆஞ்சநேயரை வழிபட்ட பின் தான் புதிய காரியங்களை தொடங்குகிறார்கள்.
இங்கு வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டால், வெண்ணெய் உருகுவது போலவே துன்பங்களும் உருகி மறையும் என்று பக்தர்கள் கருதுகின்றனர். இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் சனி பகவான் உண்டாக்கும் தோஷங்கள் குறையும். நவகிரக தோஷங்களும் விலகும் என்பதால், பக்தர்கள் அதிகம் விரும்பி தரிசிக்கின்றனர். நாமக்கல், சுசீந்திரம் போன்ற இடங்களில் பிரம்மாண்ட ஆஞ்சநேயரை காணலாம். ஆனால் ஒரே இடத்தில் இரட்டை ஆஞ்சநேயரை தரிசிக்கும் அரிதான வாய்ப்பு மேலப்பாதி ஆலயத்தில் மட்டுமே உள்ளது.