பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இன்று அரங்கேறியுள்ள பயங்கர வெடிகுண்டு தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நகரின் பரபரப்பான ஷெஹ்சாத் டவுன் பகுதியில் உள்ள தெர்லாய் இமாம்பர்காவில் (வழிபாட்டுத் தலம்) நிகழ்த்தப்பட்ட இந்த கொடூர தாக்குதலில், இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 160-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
தெர்லாய் இமாம்பர்கா வளாகத்தில் உள்ள அறிவியல் நிறுவனம் ஒன்றை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தற்கொலைப்படை தாக்குதலா அல்லது வெடிகுண்டு வைக்கப்பட்டதா என்பது குறித்து பாதுகாப்புத் துறையினர் தீவிர புலனாய்வில் ஈடுபட்டுள்ளனர். தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (PIMS) அவசர நிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமாபாத் போன்ற மிக உயரிய பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் ஒரு நகரில், கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு நடக்கும் இரண்டாவது பெரிய குண்டுவெடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்திற்கும், பாகிஸ்தான் ராணுவத்திற்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. அந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாகவே இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது. கனிம வளம் நிறைந்த பலுசிஸ்தான் மாகாணத்தில் நீண்டகாலமாக பிரிவினைவாத கிளர்ச்சி நிலவி வரும் சூழலில், தற்போது ஆயுத குழுக்கள் தலைநகர் வரை தங்களது தாக்குதல் எல்லையை விரிவுபடுத்தியுள்ளது பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
தொடர்ச்சியான ஒருங்கிணைந்த தாக்குதல்களால் பாகிஸ்தானின் பாதுகாப்பு சூழல் தற்போது கவலைக்கிடமாக மாறியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை கண்டறியும் பணியில் முடுக்கிவிடப்பட்டுள்ளனர். “இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்” என அரசு அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். இருப்பினும், அடுத்தடுத்து நிகழும் இந்த வன்முறை சம்பவங்களால் பாகிஸ்தான் மக்கள் கடும் அச்சத்திலும் பீதியிலும் உறைந்துள்ளனர்.



