கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத் தலைமைப் பேருந்து நிலையத்திற்கு, இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 16 வயது சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அவர்களைப் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு சென்று இறக்கி விடுவதாக கூறியுள்ளார்.
இதை நம்பிச் சிறுமி தனது தம்பியுடன் ஆட்டோவில் ஏறினார். சிறிது தூரம் சென்றதுமே, அந்த ஆட்டோவில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர் ஒருவரும் ஏறிக்கொண்டார். பின்னர், ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு ஆட்டோவை ஓட்டிச் சென்ற இருவரும், சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அப்போது சிறுமி எதிர்த்ததால், இருவரும் சேர்ந்து அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற சிறுவனின் தம்பியையும் கொடூரமாகத் தாக்கியதில் சிறுவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநரும் அவரது நண்பரும் சேர்ந்து சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர், சிறுமியிடம் இருந்த செல்போனையும் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மயக்கம் தெளிந்த தன் தம்பியை மீட்டுக் கொண்டு மீண்டும் தாவணகெரே பேருந்து நிலையம் வந்துள்ளார். அங்கு கடைக்காரர்களின் உதவியுடன் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார். புகாரின் பேரில், ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோன்ற மற்றொரு சம்பவம் சென்னையிலும் அரங்கேறியுள்ளது. பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு 20 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் அந்தப் பெண், 20 வயதுடைய மணி என்ற இளைஞருடன் பழகி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி மணி, தனக்குப் பிறந்தநாள் என்று கூறிச் சிறுமியை மாதவரம் அருகிலுள்ள ஒரு லாட்ஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்குச் சிறுமிக்கு மது வாங்கிக் கொடுத்துக் குடிக்க வைத்துப் போதைக்குள்ளாக்கிய பிறகு, பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
இந்த விஷயம் தெரியவந்ததும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், அதற்குள் மணி தலைமறைவாகிவிட்டதால், அவரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். இச்சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



