தமிழக அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்ற தேர்தல் ஒரு மிகப்பெரிய மும்முனைப் போட்டியாக மாறும் என்பதற்கான அறிகுறிகள் தற்போதே தென்பட தொடங்கியுள்ளன. குறிப்பாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆளுங்கட்சியான திமுகவின் கோட்டைகளை தகர்க்கும் நோக்கில் மிகத் துல்லியமான அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதில் உச்சகட்டமாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதி அல்லது திமுகவின் செல்வாக்கு மிகுந்த நட்சத்திரத் தொகுதிகளில் விஜய்யின் நேரடிப் பார்வை விழுந்துள்ளதாக தகவல்கள் கசிகின்றன. ஆளுங்கட்சியின் மீதான மக்களின் அதிருப்திகள் மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு செய்ய தனிப்படையையே விஜய் களமிறக்கியிருப்பது அரசியல் அரங்கில் ரகசிய ஸ்கெட்ச் ஆக பார்க்கப்படுகிறது.
முதல்வரின் தொகுதியிலேயே ஒரு வலுவான வேட்பாளரை நிறுத்துவதன் மூலம், திமுகவின் கவனத்தை திசைதிருப்பி ஒட்டுமொத்த அரசு இயந்திரத்திற்கும் நெருக்கடி கொடுக்க தவெக திட்டமிட்டுள்ளது. இதற்காக தொகுதி வாரியாக பூத் கமிட்டிகளை பலப்படுத்துவது மற்றும் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது எனப் போர் மேகங்கள் சூழத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், திமுகவின் தீவிர ஆதரவாளராக இருந்து வந்த நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத் அண்மையில் தவெக-வில் இணைந்தது அக்கட்சிக்கு ஒரு கூடுதல் ஆயுதமாகக் கிடைத்துள்ளது.
அரசியல் மேடைகளில் தனது அடுக்குமொழி வசீகரத்தால் கூட்டத்தை கட்டியிழுக்கும் நாஞ்சில் சம்பத்தை, திமுகவின் கோட்டைக்குள்ளேயே இறக்கிவிட விஜய் திட்டமிட்டுள்ளார். குறிப்பாக, முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே தனது முதல் அதிரடிப் பேச்சை தொடங்க நாஞ்சில் சம்பத் விருப்பம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. திமுகவின் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் நிர்வாக குளறுபடிகளை நன்கு அறிந்த அவர், அதே மேடையில் ஆளுங்கட்சியை மிக கடுமையாக விமர்சிக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
திமுகவின் அசைக்க முடியாத தொகுதிகளாகக் கருதப்படும் இடங்களிலேயே தவெக தனது அரசியல் ஆட்டத்தை தொடங்குவது, 2026 தேர்தலில் ஒரு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஆளுங்கட்சியின் செல்வாக்கை சோதிக்கும் இந்தத் தீவிர தலையீடு, வரும் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிட கட்சிகளுக்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக அமையப்போகிறது.
Read More : சித்தர்கள் வணங்கும் சிவன் கோயில்..!! 800 ஆண்டுகால வரலாறு..!! தமிழ்நாட்டில் எங்கிருக்கு தெரியுமா..?



