உலகில் வித்தியாசமான நகரங்கள் பல உள்ளன. ஆனால், அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காமரூன் ஏர்பார்க் (Cameron Airpark) என்ற சிறிய நகரம், அதன் தனித்துவத்தால் உலகம் முழுவதும் கவனம் ஈர்க்கிறது. இங்கு வசிக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விமானம் இருக்கிறது என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா..? ஆம்.. உண்மைதான்.. இது மற்ற நகரங்களில் இருந்து முற்றிலும் விலகி நிற்கச் செய்கிறது.
1963-ல் உருவாக்கப்பட்ட காமரூன் ஏர்பார்க், விமானிகளை மனதில் வைத்து வடிவமைக்கப்பட்டது. மொத்தம் 124 வீடுகளைக் கொண்ட இந்த நகரத்தில், ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் விமானங்களை நிறுத்தும் வசதி உள்ளது. விமானங்களை எளிதாக தரையிறக்கவும், அருகிலுள்ள விமான நிலையத்திற்கு நேரடியாகச் செல்லவும், இங்கு 100 அடி அகலத்திலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் தொழில்முறை விமானிகள், ஓய்வுபெற்ற இராணுவ விமானிகள், சிலர் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் போன்ற உயர் தொழில்முறை நிபுணர்கள். ஆனால், அனைவருக்கும் விமான ஓட்டுநர் அனுமதிப்பத்திரம் (Pilot License) அவசியம். விமானத்தை இயக்குவதிலும் பராமரிப்பதிலும் சிறந்த அறிவும் அனுபவமும் இவர்கள் பெற்றுள்ளனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, அமெரிக்க அரசு விமானப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், இத்தகைய குடியிருப்பு விமானப் பூங்காக்களை உருவாக்கும் திட்டங்களை ஆதரித்தது. அதன்படி, காமரூன் ஏர்பார்க், ஓய்வுபெற்ற இராணுவ விமானிகளுக்கும், விமான ஆர்வலர்களுக்கும் சிறந்த குடியிருப்பாக மாறியது.
இந்த நகரின் சாலைகள் கூட விமானங்களை மையமாகக் கொண்டு பெயரிடப்பட்டுள்ளன. இதனால், காமரூன் ஏர்பார்க் நகரம் ஒரு சாதாரண குடியிருப்பு பகுதியாக இல்லாமல், ஒரு ‘விமான வாழ்க்கை மையம்’ ஆக மாறியுள்ளது. இன்றளவும், இந்த நகரின் வாழ்க்கை முறை உலகம் முழுவதும் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி, விமானிகளுக்கான கனவுக் குடியிருப்பாக விளங்குகிறது.