பிலிப்பைன்ஸில் கோர தாண்டமாடிய சூறாவளி மற்றும் கனமழையால் 50க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஆங்காங்கே ஆண்டுதோறும் பூங்கம்பம், சூறாவளி, கனமழை, வெள்ளப்பெருக்கு என இயற்கை பேரிடர்கள் பேரழிவை ஏற்படுத்துவிட்டு செல்கின்றன. அந்தவகையில், அந்நாட்டின் மத்திய பகுதியில் கல்மேகி (Kalmegi) சூறாவளி தாக்கியது. சூறாவளியோடு, திடீர் வெள்ளமும் ஏற்பட்டதால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். சூறாவளிக்கு இதுவரை 52 பேர் பலியாகி இருக்கின்றனர். பலரும், வீடுகள், கட்டடங்களில் ஏறி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டு உள்ளனர். ஏராளமான கார்கள், டூ வீலர்கள் முற்றிலும் மூழ்கி உள்ளன.
சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன. தெற்கு லெயிடின் பகுதியில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது. செபு மாகாணமும் பலத்த சேதத்தை சந்தித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்து இருப்பதால் போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் உதவிகள் வழங்கும் பணிகளில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர, பிலிப்பைன்ஸ் நாட்டில் கால்மேகி புயலால் ஏற்பட்ட பாதிப்புகளின்போது மீட்பு பணியில் ஈடுபட்ட ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி 5 பேர் பலியாகி உள்ளனா். நேற்று அகுசான் டெல் சூர் மாகாணத்தின் லோரெட்டோ நகரம் அருகே பிலிப்பைன்ஸ் வான்படைச் சார்ந்த சூப்பர் ஹியூயி என்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டர், புயலால் பாதிக்கப்பட்ட தெற்கு மற்றும் மத்திய பிலிப்பைன்ஸ் மாகாணங்களுக்கு மனிதாபிமான உதவிகள் மற்றும் மீட்பு பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது.
பிலிப்பைன்ஸ் கிழக்கு மிந்தனாவ் தளபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த ஹெலிகாப்டர் புயல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டது. தற்போது மீட்பு குழுக்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்து, உயிரிழந்த வான்படை வீரர்களின் உடல்களை மீட்கும் பணியில் உள்ளன, என தெரிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டர் ஏன் விழுந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மோசமான காலநிலை, காற்றழுத்தம், அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம் என தொடக்க நிலை விசாரணைகள் தெரிவிக்கின்றன.



