பெங்களூருவில் தாய் மகள் மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில் இளைஞர் ஒருவர் மண்வெட்டியுடன் நிர்வாணமாக வீட்டின் உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், ஆவலஹள்ளி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட சீமசந்திரா பகுதியில் உள்ள கே.ஆர். டிபென்ஸ் லேஅவுட் அருகே நடந்தது.
அங்கு தாய்–மகள் இருவரும் வசித்து வந்தனர்.. சம்பவத்தன்று இரவு, யாரோ வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்டது. இருவரும் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தனர். அப்போது, ஒருவர் நிர்வாண நிலையில், கையில் மண்வெட்டி வைத்தபடி வீட்டின் அருகே நின்று கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். அதற்கும் மேலாக, அவர் ஜன்னல் கண்ணாடியை உடைத்ததோடு, வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை சேதப்படுத்தினார்.
பின்னர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற அவர் நடவடிக்கையைப் பார்த்த தாய், மகள் இருவரும் கூச்சலிட துவங்கினர். அவர்கள் அலறும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அங்கிருந்து தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவலஹள்ளி போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அவர் எதற்காக நிர்வாணமாக வீட்டிற்குள் நுழைய முயன்றார் என்பது குறித்து விசாரணை நடைபெறுகிறது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.