எளிமை, நேர்மையின் அடையாளம்.. வாழ்நாள் போராளி.. தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சகாப்தம் நல்லகண்ணு..!

nallakannu

எளிமை, தியாகம், நேர்மைக்கு பெயர் பெற்ற முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இன்று காலமானார்.. இந்திய சுதந்திரப் போராட்டம் தொடங்கி, விவசாயிகள் உரிமைப் போராட்டம், தீண்டாமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் கனிம வளக் கொள்ளைக்கு எதிரான எதிர்ப்பு வரை, தனது வாழ்நாளின் பெரும் பகுதியை போராட்டங்களுக்கும் சிறை வாழ்க்கைக்கும் அர்ப்பணித்தவர் தோழர் நல்லகண்ணு. அரசியல் எல்லைகளைத் தாண்டி, பல்வேறு கட்சித் தலைவர்களாலும் “தோழர் ஆர்.என்.கே” என மரியாதையுடன் அழைக்கப்பட்டவர் தான் நல்லகண்ணு.


பிறப்பும் பள்ளிப் பருவமும்

ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் பகுதியில், 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி, விவசாயக் குடும்பத்தில் ராமசாமி – கருப்பாயி தம்பதியரின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். கிராமியச் சூழலும், உழைக்கும் மக்களின் வாழ்க்கையும் அவரின் சிந்தனைகளை ஆரம்ப காலத்திலேயே வடிவமைத்தன.

ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்ற போது, ஆசிரியர் பலவேசம் மூலம் பொதுவுடைமைக் கொள்கைகள் அவருக்கு அறிமுகமானது. அதே ஆசிரியரின் வழிகாட்டுதலால் பாரதியார், திரு.வி.கல்யாணசுந்தரம் மற்றும் விவேகானந்தர் ஆகியோரின் படைப்புகளையும் அவர் ஆழமாக வாசிக்கத் தொடங்கினார்.

சிந்தனை மாற்றம் மற்றும் அரசியல் விழிப்பு

பாரதியாரின் கவிதைகளும், திரு.வி.கல்யாணசுந்தரத்தின் எழுத்துகளும் தன்னுள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாக, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற உரையாடலில் நல்லகண்ணு கூறியிருந்தார். சாதியமைப்புகளை உடைத்து, சுரண்டல் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதே தனது வாழ்க்கை இலக்கு என்றும் அவர் கூறியிருந்தார்..

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பயணம்

1943 ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, அதன்பின்னர் 80 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே கட்சியில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். 16 வயதில் கட்சியில் சேர விரும்பியபோது, வயது காரணமாக அனுமதி மறுக்கப்பட்டதாகவும், 18 வயது நிறைவடைந்ததும் உறுப்பினராக இணைந்ததாகவும் அவர் நினைவுகூர்ந்தார்.

சுதந்திரப் போராட்டமும் நில உரிமைப் போராட்டமும்

பள்ளிப் பருவத்தில் காந்திய சிந்தனையால் ஈர்க்கப்பட்ட நல்லகண்ணு, பின்னர் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வழியில் பயணித்தார். ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களில் ஈடுபட்டதோடு, திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற சுதந்திரப் போராட்டங்களிலும் பங்கேற்றார்.

கட்சியில் இணைந்த சில ஆண்டுகளிலேயே கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948 ஆம் ஆண்டு “உழுபவனுக்கே நிலம்” என்ற முழக்கத்துடன் நடைபெற்ற நில உரிமைப் போராட்டத்தில் அவர் தீவிரமாக செயல்பட்டார். இதன் காரணமாக, இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாக நெல்லை சதி வழக்கில் சேர்க்கப்பட்டு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். கடுமையான சோதனைகளுக்கிடையிலும், தனது சக தோழர்களை அவர் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை.

குடும்ப வாழ்க்கையும் சமூகப் பணியும்

சிறைவாசத்திற்குப் பிறகு, 1958 ஆம் ஆண்டு ரஞ்சிதாவுடன் நல்லகண்ணுவின் திருமணம் நடைபெற்றது. அதே காலகட்டத்தில், தலித் மக்களுக்கு வீடு மற்றும் நிலம் இல்லாத நிலை நிலவியதை உணர்ந்து, அவர்களுக்கான குடியிருப்பு உரிமைக்காக அவர் போராடினார். தலித் மக்களுக்கு நிலையான வாழ்விட உரிமை கிடைக்கச் செய்ததில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கது.

விவசாய சங்கப் பணிகள்

நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்க நடவடிக்கைகள் முக்கிய இடம் பெற்றன. 1970 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நில மீட்பு இயக்கங்களில், சிலரின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்களை மீட்டெடுக்க நாடு முழுவதும் நடந்த போராட்டங்களில் அவர் ஈடுபட்டார். தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நில விவரங்களைத் தொகுத்து, ஒரு சிறிய நூலையும் வெளியிட்டார்.

சமூக அமைதி முயற்சிகள்

1996 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட சாதி மோதல்களில், நல்லகண்ணுவின் குடும்பத்திற்கே துயரம் நேர்ந்தது. இருந்தாலும், பதற்றமான சூழலிலும் அமைதியை நிலைநாட்ட முயற்சி மேற்கொண்டார்.. . “ஒரு சிலரின் செயலுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்கக் கூடாது” என்ற அவரது நிலைப்பாடு, அப்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

உண்ணாவிரதமும் ஜனநாயகப் போராட்டமும்

மதுரை மாவட்டத்தின் பாப்பாபட்டி, கீரிப்பட்டி போன்ற ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் பதவியேற்க முடியாத நிலையை எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றிணைத்து நல்லகண்ணு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தின் விளைவாக, 2006 ஆம் ஆண்டு அரசு தேர்தலை நடத்த வேண்டிய நிலை வந்தது.

கனிம வளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம்

86 வயதிலும் நல்லகண்ணு போராட்டக் களத்திலேயே இருந்தார். 2010 ஆம் ஆண்டு தாமிரபரணி ஆற்றில் மணல் கொள்ளையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டார். ஆற்றுக்கும் மக்களுக்கும் உள்ள உறவை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்த அவரது வாதங்கள், நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தன. அதன் விளைவாக, பல ஆண்டுகள் மணல் அள்ளுதல் தடை செய்யப்பட்டது.

கட்சி பொறுப்புகளும் தேர்தல் அரசியலும்

கிளைச் செயலாளர் முதல் மாநில செயலாளர் வரை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளை நல்லகண்ணு வகித்துள்ளார். தேர்தல் அரசியலிலும் பங்கேற்ற அவர், 1980 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தோல்வியடைந்தாலும், கொள்கை அரசியலிலிருந்து ஒருபோதும் விலகவில்லை.

தனிப்பட்ட சோகமும் தியாகமும்

2015 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தில், நல்லகண்ணுவின் வீடு பாதிக்கப்பட்டது. உயிரைக் காப்பாற்ற வந்த படகில் முதலில் மற்றவர்களை மீட்கச் சொன்ன அவரது குணம் கட்சி நிர்வாகிகளால் இன்னும் நினைவுகூரப்படுகிறது. அந்த வெள்ளத்தில், அவர் சேகரித்த ஆயிரக்கணக்கான நூல்கள் அழிந்தது தான் அவருக்குப் பெரிய இழப்பாக இருந்தது.

மரியாதைகளும் எதிர்காலப் பார்வையும்

2022 ஆம் ஆண்டு, தமிழுக்கான சேவையைப் பாராட்டி, தமிழக அரசு அவருக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது. அதற்காக வழங்கப்பட்ட பரிசுத் தொகையையும், தனது சொந்த பணத்தையும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கினார். கட்சி நூற்றாண்டை நினைவுகூர்ந்த அவர், அரசியல் என்பது வயது அல்ல, அனுபவமும் பொறுப்பும் எனக் குறிப்பிட்டு, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

தோழர் நல்லகண்ணு என்பது ஒரு தனிநபரின் வாழ்க்கை மட்டும் அல்ல; அது தமிழகத்தின் போராட்ட அரசியல் வரலாற்றின் ஒரு சகாப்தம்.. அதிகாரத்தை விட கொள்கையையும், பதவியை விட மனிதநேயத்தையும் முன்னிறுத்திய அவரது பயணம், வருங்கால தலைமுறைகளுக்கும் ஒரு வழிகாட்டியாகத் தொடரும். நல்லகண்ணு இன்று நம்மை விட்டு பிரிந்தாலும் அவருடைய தூய்மையான அரசியல் வாழ்க்கை என்றென்றும் போற்றப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..!

RUPA

Next Post

மறைந்த நல்லகண்ணுவின் உடலுக்கு முழு அரசு மரியாதை.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..! அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை என புகழஞ்சலி..!

Wed Feb 25 , 2026
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.. முக்கிய உடல் உறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லக்கண்ணு பிற்பகல் 1.55 மணியளவில் காலமானார்.. எளிமை, நேர்மையின் அடையாளமாகவும், வாழ்நாள் போராளியாகவும் தவிர்க்க முடியாத சகாப்தமாக இருந்த நல்லகண்ணுவின் மறைவு தமிழக அரசியலில் ஏற்பட்ட பேரிழப்பாகும்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான பாலன் இல்லத்திற்கு நல்லகண்ணுவின் உடல் கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை மாலை […]
nallakannu stalin

You May Like