நெல்லை மாவட்டம் பேட்டை குளம் பகுதியைச் சேர்ந்த துணை நடிகர் ராஜ் (வயது 45), தூத்துக்குடி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். ‘கிராக்கி’, ‘விதி எண்-3’, ‘உயிர் மூச்சு’ உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் இவர் துணை வேடங்களில் நடித்துள்ளார்.
மறைந்த நடிகர் ராஜ், மாசானம் என்பவரின் மகன் ஆவார். இவரது மனைவி சாய்ஸ். ஒட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு ரூபன்ஜான் என்ற மகனும், டைட்டஸ் மேத்திவ் என்ற மகளும் உள்ளனர். இந்தக் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளாகத் தூத்துக்குடி கே.டி.சி. நகரில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை, நடிகர் ராஜ் தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவர் செவல்குளம் அருகே வந்தபோது, எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. அந்த நேரத்தில், சாலையில் கிடந்த ஒரு கல் மீது பலமாக மோதியதில் அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நடிகர் ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்தத் தகவல் அறிந்ததும் ஒட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்யேசுதாசன் தலைமையிலான காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உயிரிழந்த நடிகர் ராஜின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சாலை விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சினிமா துணை நடிகர் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : “கரூர் மக்களிடம் மறக்காமல் இதை சொல்லுங்கள்”..!! மாவட்ட செயலாளரிடம் விஜய் சொன்ன அந்த வார்த்தை..!!