ஒடிசா மாநிலத்தில் இன்றூ சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.. ரூர்கேலா அருகே ஒரு தனியார் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கிய போது இந்த விபத்து நடந்துள்ளது. இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த குறைந்தது ஆறு பேர் லேசான காயமடைந்தனர் என்று ஒடிசாவின் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பி.பி. ஜெனா தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் “ “ரூர்கேலாவிலிருந்து புவனேஸ்வருக்கு ஆறு பயணிகளுடன் சென்ற ஏ-1 ரக ஒன்பது இருக்கைகள் கொண்ட ஒரு தனியார் விமானம் விபத்துக்குள்ளானது. பயணிகள் லேசான காயங்களுடன் நலமாக உள்ளனர். இந்தச் சம்பவம் ரூர்கேலாவிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜல்தா என்ற இடத்தில் நடந்தது. கடவுளின் அருளால், இது ஒரு பெரிய விபத்து அல்ல,” என்று தெரிவித்தார்..
பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் பிரசன்னா பிரதான் பேசிய போது, “அந்த விமானம் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலாவுக்குச் சென்று கொண்டிருந்தது. ரூர்கேலாவுக்கு 10 கி.மீ. முன்பாக அது அவசரமாகத் தரையிறங்கியது. அதில் 4 பயணிகள் மற்றும் 2 விமானப் பணியாளர்கள் இருந்தனர். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். அந்த விமானம் இந்தியா ஒன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தது. அந்த விமானத்தின் எண் C-208 ஆகும்.” என்று தெரிவித்தார்..
இந்தச் சம்பவம் குறித்து மாநில அரசு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார். “எங்கள் இயக்குநரும் விரைவில் விபத்து நடந்த இடத்திற்குச் செல்வார்,” என்றும் அவர் கூறினார்.
மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன, காயமடைந்தவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். இது ஒரு தனியார் நிறுவனத்தால் இயக்கப்படும் ரூர்கேலா மற்றும் புவனேஸ்வர் இடையேயான வழக்கமான விமானம் என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



